முஸ்லிகளுக்கு காணிகளை பகிர்ந்தளித்தாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை –மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்

தமிழர்கள் அதிகமாக வாழும்பகுதியில் உள்ள காணிகளை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

எந்தவித ஆதாரங்களும் இன்றி ஏதோவொரு நோக்கத்திற்கு எழுதப்பட்ட செய்தியாகவே இதனை கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தவராஜா முஸ்லிம்களுக்கு காணிகளை வழங்குவதாக இணையத்தளம் ஒன்றில் எனது பெயரை குறிப்பிட்டு செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் தமிழர்களுக்கு காணியை பகிர்ந்தளிப்பதும்,முஸ்லிம்கள் செறிந்துவாழும் பகுதியில் முஸ்லிம்களுக்கு காணியை பகிர்ந்தளிப்பதும் வழமையான செயற்பாடாகும்.முஸ்லிம்களுக்கு தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் தமிழர்களின் காணிகளை பகிர்ந்தளிக்கின்றார் என்று வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதும் எதுவித ஆதாரமும் இன்றி ஏதொவொரு நோக்கத்திற்காக எழுதப்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.

கடந்த மூன்றாம் திகதி சத்துருக்கொண்டானில் கடமையாற்றிய கிராமசேவையாளர் ஒருவரை புளியந்தீவு தெற்குக்கு இடமாற்றியதுடன் இன்னும் இருவரை நிர்வாக சீர்படுத்தலுக்காக இடமாற்றம் வழங்கியிருந்தேன்.அந்தவேளையில் மூன்றுபேரும் இடமாற்ற கட்டளைக்கடிதத்தினை பெற்றிருந்தனர்.குறித்த கிராமசேவையாளர் தாமரைக்கேணியை நிரந்தர பிரிவாக கொண்டிருந்தபோதிலும் சத்துருக்கொண்டானில் மேலதிக சேவையில் ஈடுபட்டுவந்தார்.

நகரப்பகுதிக்கு முதிவான கிராம உத்தியோகத்தர் ஒருவர் தேவையென்ற நிலையிலேயே அவர் நியமிக்கப்பட்டார்.எனினும் அவர் குறித்த பகுதிகளில் சிலரிடம் இடமாற்றத்திற்கு எதிராக கையெழுத்துக்களை வலுக்கட்டாயமாக வாங்கியுள்ளார்.அந்தவேளையிலேயே இந்த செய்தியும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.