மட்டக்களப்பில் பிரஜைகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 44 இளைஞர் கழகங்கள் தெரிவு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரஜை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் 1500 திட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 திட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைரூஸ் தெரிவித்தார்.
இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்கழகங்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வின் இறுதி நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நேர்முக தேர்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன், சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜெயசேகர்,கட்டிட திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி ஜெயராஜன்,மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் சசிகுமார் மற்றும் உதவி பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இளைஞர்களின் மூலம் கிராமத்தினை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூலம் திறமை மிக்க இளைஞர் கழகத்தினை தெரிவுசெய்யும் வகையில் இந்த நேர்முக தேர்வு நடைபெற்றது.

இரண்டு தினங்கள் நடைபெற்ற இந்த நேர்முக தேர்வில் 80க்கும் மேற்பட்ட இளைஞர் கழகங்கள் கலந்துகொண்டதாகவும் அவற்றில் 44 கழகங்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைரூஸ் தெரிவித்தார்.

இதன்மூலம் இளைஞர் கழகங்களுக்கு தலா 75ஆயிரம் ரூபா நிதி வழங்கப்படவுள்ளதுடன் அவற்றின் மூன்று மடங்கு பெறுமதியான திட்டங்களை இளைஞர்கள் மேற்கொள்ளும் வகையில் இந்த பிரஜை அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு மூலம் 10 இளைஞர் யுவதிகள் தெரிவுசெய்யப்பட்டு தேசிய ரீதியான போட்டிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.