மட்டக்களப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

இணையத்தளங்கள் மற்றும் சமூகத்தளங்களில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கண்டனம் தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இன்று புதன்கிழமை காலை மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் நலன்புரி சங்கம் மற்றும் பதவியணியினர் நலன்புரிச்சங்கம் ஆகியன இணைந்து  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டதுடன் தமது எதிர்ப்பினையும் தெரிவித்தனர்.

சில இணையத்தளங்கள் தமது பொறுப்புகளை மறந்து ஊடக தர்மத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடுவதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.


அண்மையில் பிரதேச செயலாளர் ஒரு இனத்திற்கு காணியை வழங்கியதாகவும் அதனை எதிர்த்த கிராம சேவையாளரை இடமாற்றியதாகவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்தன.இதுமுற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதுடன் இன நல்லுறவை சீர்குலைக்கும் செய்தி எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

செய்தியின் உண்மைத்தன்மையினை அறிந்துசெய்திகளை வெளியிடுவதன் மூலம் சமூகத்தின் பொறுப்புக்கூறலை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் இங்கு சுட்டிக்காட்டினர்.

பிரதேச செயலகத்தில் இருந்து கண்டன ஊர்வலம் ஆரம்பமாகி காந்திபூங்காவரை வந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன் மீண்டும் மாவட்ட செயலகம் வரையில் ஆர்ப்பாட்ட பேரணி சென்று அங்கு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.