தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையீனம் காரணமாக தொழில்வாய்ப்பு திட்டம் கைநழுவி செல்லும் நிலை –ஜனா

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களிடையே காணப்படும் ஒற்றுமையீனம் காரணமாக தமிழ் இளைஞர்களுக்கான பெருமளவு தொழில்வாய்ப்பினை வழங்கும் திட்டம் கைநழுவிச்செல்லும் நிலையேற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் 22வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடந்த முப்பது ஆண்டு காலமாக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் காரணமாக எமது இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பற்று இருக்கின்றார்கள். முன்னாள் போராளிகள் தமது புத்தகப் பைகளை தூக்கியெறிந்துவிட்டு ஆயுதங்களை கையிலேந்தி போராடியதன் காரணமாக கல்விச் சான்றிதழ்கள் எதுவும் இல்லாத நிலையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள். முன்னாள் பெண்போராளிகள் தொழில் வாய்ப்புகளின்றி இருப்பதுடன் திருமண வாழ்க்கையுமற்று இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17500 பெண்கள் போரின் காரணமாக விதவைகளாக்கப்பட்டுள்ளார்கள். இவற்றுள் 7000ற்கும் மேற்பட்ட விதவைகள் யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக இந்நாட்டில் மாகாணசபைகள் உருவாக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்தன. 2006ஆம் ஆண்டு ஜே.வி.பி யினர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து இணைந்திருந்த வடக்கு கிழக்கை இருவேறாக பிரித்தனர்.
2008ஆம் ஆண்டு முதலாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது.

மாகாணசபைகளுக்கு முற்றுமுழுதான அதிகாரம் வேண்டுமென்று இன்று ஒன்பது மாகாணங்களிலும் இருக்கின்ற முதலமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்தவகையில் எமது மாகாணத்திற்கும் பூரணமான அதிகாரப் பரவலாக்கலுடன் ஒரு சுயாட்சி இருக்குமானால் எமது இளைஞர் யுவதிகளுக்கு உரிய வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த முடியும்.

புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் எம்முடைய பகுதிகளில் சில அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு 200மில்லியன்ரூபா பணம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வடக்கில் எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்களிடையே காணப்பட்ட ஒற்றுமையீனத்தால் ஒரு குழப்பநிலை உருவாகியது. ஆனால் இன்று இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை அங்கு அமைப்பதற்கு சந்தர்ப்பம் தோன்றியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் 4000மில்லியன் ரூபா செலவில் நன்னீர் இறால்,நண்டு,மீன் வளர்ப்பு திட்டம் ஒன்று வரவிருப்பதாகவும் உள்ளுர் அரசியல்வாதிகள் மக்களை சரியான முறையில் வழிநடத்த தவறியதன் காரணத்தினால் அத்திட்டம் வேறு மாவட்டத்திற்கு வேறு மாகாணத்திற்கு மாற்றப்படவிருப்பதாகவும் மீன்பிடி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து இத்திட்டம் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வாகரைப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதால் என்னென்ன நன்மை,தீமைகள் வரும் என்பதை நான்கு கூட்டங்களை நடத்தி ஆராய்ந்திருந்தோம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற,மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இடையில் ஒற்றுமையான ஒரு உடன்பாடு எட்டப்படவில்லை. இதன் காரணமாக இத்திட்டம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் காணப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்திலுள்ள ஐயாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு அற்றுப்போய்விடுமோ என்ற ஒரு அச்சம் உருவாகியது.

1980ஆம் ஆண்டளவில் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இறால் வளர்ப்பு செய்யப்பட்டது. அது நவீன முறையில் செய்யப்படவில்லை. இறால் வளர்ப்பிற்கு உபயோகிக்கப்பட்ட நீர் மீண்டும் ஆற்றினுள் பாய்ச்சப்பட்டது.

இதன்காரணமாக ஆற்று நீரினுள் இரசாயணப் பதார்த்தங்கள் கலப்பதால் கண்டல் தாவரங்கள் அழிவடைந்தன. நன்னீர் மீனினங்கள் அழிந்தன. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். அந்த நிலைமை மீண்டும் வருமென எங்களுக்குள் இருக்கின்ற சில அரசியல்வாதிகள் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் புத்தளத்திற்குச் சென்று அங்கு நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டவரும் நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டத்தினை பார்வையிட்டோம். அங்கு பாய்ச்சப்படும் நீர் ஆற்றினுள் கலக்கவிடாமல் குளம் ஒன்றினுள் தேக்கிவைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் இறால் வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது. இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதை நாங்கள் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தோம்.
4000மில்லியன் ரூபா என்பது பெரிய தொகையாகும்.அது எமது மாவட்டத்திற்கு வந்து திரும்பிச் செல்வதை அனுமதிக்கக்கூடாது.

ஐயாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இத்திட்டத்தை திருப்பியனுப்பக்கூடாது. இத்திட்டத்திற்கு முதலீடு செய்யவிருக்கும் முதலாளிகளுள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முதலீடு செய்யும் முதலாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அதற்கான முதலீகள் குறைவு என்றால் 2500 ஏக்கரில் அமைக்கப்படும் நில அளவினை குறைத்து ஒரு குறிப்பிட்ட முதலீட்டாளர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்து இந்த திட்டத்தினை பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தவேண்டும்.

எமக்குள் இருக்கும் ஒற்றுமையினம் காரணமாக ஒரு சில பிரதிநிதிகள் அப்பகுதி மக்களின் வாக்குகளை மாத்திரம் குறிக்கோளாக கொண்டு செயற்படுவதன் காரணமாக இந்த திட்டம் கைநலுவிச்செல்லும் நிலையேற்பட்டுள்ளது.

இது மத்திய அரசுக்கு உட்பட்ட திட்டம்.இது மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியொதுக்கீடு.மத்திய அரசின் மீன்பிடித்துறை அமைச்சர் இந்த திட்டத்தில் நேரடியாக பங்குபற்றியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பொறுப்புக்கொடுத்துள்ளோம்.

அவர்கள் நியாயமாக சிந்திக்கவேண்டும்,நிதானமாக சிந்திக்கவேண்டும்.இந்த திட்டம் இந்த மாவட்டத்தினைவிட்டு கைநழுவிச்செல்லாமல் மாவட்டம் அபிவிருத்தி அடைவதற்கும் மாவட்டத்தில் உள்ள ஐந்தாயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பினைபெறுவதற்குமான வழிவகைகளை மத்திய அரசாங்கத்துடன் கதைத்து இந்த திட்டத்தினை அமுல்படுத்தவேண்டும்.