வாழ்வின் எழுச்சி திணைக்களத்திற்கு 2700பேரை இணைக்க நடவடிக்கை –அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க

வாழ்வின் எழுச்சி திணைக்களத்திற்கு 2700 சமுர்த்தி முகாமையாளர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த வாழ்வின் எழுச்சி திணைக்கள முகாமையாளர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு நேற்று பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தாழங்குடா கல்வியியல் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புதுறை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மகிந்த செனவிரட்ன,மேலதிக செயலாளர் அனுர வீரத்துங்க,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் குணரெட்னம் உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் வகையிலும் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் ஊடாக பொதுமக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் மற்றும் திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் வாழ்வின் எழுச்சி வங்கிகளை நவீன மயப்படுத்தி அதன் மூலம் மக்கள் நன்மையடையும் வகையில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சரை வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் அம்பாறை-மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களை வழங்கி கௌரவித்தனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

நலன் உதவிகள் வழங்குவதினால் மட்டும் வறுமையினை குறைத்துவிடமுடியாது.அவர்கள் நிரந்தர வருமானத்தினைப்பெற்றுக்கொள்ளும் வகையில் மூலதன வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும்.அதற்காகவே சமுர்த்தி உதவியில் சிறு தொகையினை சேமிப்பாக மாற்றப்படுகின்றது.

கடந்த காலத்தில் சமுர்த்தி திட்டம் தோல்வி அடைந்ததற்கு அதிகாரிகள் காரணம் அல்ல.பசில் ராஜபக்ஸவே அதற்கு காரணம்.அவரே இதற்கு பொறுப்புகூறவேண்டியவர்.

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினை வினைத்திறன்மிக்கதாக மாற்றத்தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.அதன் கீழ் வாழ்வின் எழுச்சி திணைக்களம் மற்றும் வாழ்வின் எழுச்சி வங்கிகளை நவீனமயப்படுத்தப்படவுள்ளன.

கடந்த காலத்தில் வாழ்வின் எழுச்சி திணைக்களம் ஊடாக பல்வேறு கடன்கள் பல்வேறு வட்டி வீதங்களில் வழங்கப்பட்டு பாரிய தவறுகள் நடைபெற்றுள்ளன.அவற்றினை சீர்செய்து பயனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் நாளாந்த,வாராந்த,மாதாந்த கடன்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுவருகின்றன.

எதிர்காலத்தில் கிராம மட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் கிராமங்கள் தோறும் வறுமை நிலையை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அவை சட்டமாக்கப்படுவதற்காக சட்டமா அதிபரிடம் வழங்கப்பட்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்படவுள்ளது.

சமுர்த்தி முகாமையாளர்கள் 2700பேருக்கான வெற்றிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் 2100பேர் முகாமையாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

அதேபோன்று 600 உதவிப்பணிப்பாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.சமுர்த்தி முகாமையாளர்களாக கடமையாற்றுவோருக்கு இந்த பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளன.