உலகில் எங்கும் இல்லாத அதிசயம் மட்டக்களப்பில் உள்ளது –முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காசிநாதர்

இலங்கையின் எந்த மாகாணத்திற்கும் இல்லாத புகழ் மட்டக்களப்புக்கு உள்ளது.அந்த புகழை அனுபவிக்க தெரியாதவர்களாக மட்டக்களப்பு மக்கள் உள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிபருமான பிரின்ஸ் காசிநாதர் தெரிவித்தார்.
உலகில் எங்கும் இல்லாத அதிசயம் மட்டக்களப்பு வாவியில் மீன்பாடும் நிகழ்வு உள்ளதாகவும் அவற்றினை நிரூபிக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் அபிவிருத்தி திட்டங்களின் மைல்கல்லாக அமைக்கப்பட்டுள்ள மூன்று பொழுது போக்கு இடங்கள் நேற்று புதன்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.

பிரின்ஸ் காசிநாதரின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நடைபாலம் மற்றும் ஏ.கெ.பத்மநாதன் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நடைபாதை,சிறுவர் பூங்கா என்பன இவ்வாறு திறந்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் அதிகரிப்பு மற்றும் உள்ளுர் மக்கள் பொழுதுபோக்கினை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு வாவியினை அண்மித்ததாக இந்த பூங்கா மற்றும் நடைபாதைகள் திறந்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளா எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிபருமான பிரின்ஸ் காசிநாதரும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வின்போது மட்டக்களப்பு கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட பாடல்களும் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.