படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடுகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை –ஊடகவியலாளர்கள் கவலை

திருகோணமலையில்  யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுகிர்தராஜன்   படுகொலை செய்யப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் 10வது ஆண்டுகளாகின்ற போதிலும் இதுவரை   நீதி கிடைக்கவில்லை என  ஊடக அமைப்புகளினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.


அன்னாரை  10வது ஆண்டு நினைவு கொள்ளும்  வகையில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற   நினைவு கூறல் நிகழ்வில்  ஊடகவியலாளர்கள் உட்பட பலரும்  கலந்து கொண்டு அவரது  ஊடகப் பணியை நினைவு கூர்ந்தனர்.  

தற்போது புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்துள்ள நிலையில் இந்த படுகொலை சம்பவத்தின் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஊடக அமைப்புகளினால் கோரிக்கையும் முன் வைக்கப்படுகின்றது.

சுதந்திர ஊடகவியலாளரான சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி தனது 37வது வயதில் திருகோணமலையில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அம்பாரை மாவட்டம் கல்முனையை சேர்ந்த இவர் திருகோணமலை துறைமுகத்தில்  தொழில் புரிந்த நிலையில் உள்நாட்டு பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளராகவும் நடப்பு விவகார ஆய்வாளராகவும் அவ்வேளை பணியாற்றியிருக்கின்றார்

திருகோணமலை நகரிலுள்ள தனது வீட்டிலிருந்து வழமை போல் தொழிலுக்கு செல்லும் போது மோட்டர்  சைக்கலில் வந்ததாக கூறப்படும்  ஆயுததாரிகளினால்  வீதியில் வைத்து இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

மாகாண ஆளுநர் அலுவலகம் உட்பட பாதுகாப்பு வலய பிரதேசத்தில்  இடம் பெற்றிருந்த இந்த சம்பவம்   குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருந்ததாக கடந்த காலத்தை நினைவு கொள்ளும்  அங்குள்ள ஊடகவியலாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

 திருகோணமலையில் சிறப்பு அதிரடிப்படையினரால் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு மூன்று வார காலத்திற்குள்  ஊடகவியலாளரான சுப்பிரமணியம் சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பாதுகாப்பு தரப்பின் அச்சுறுத்தல்களை ஊடகவியலாளர் என்ற ரீதியில் எதிர்கொண்டிருந்ததாக கூறப்படும் இவர்  இறுதியாக மாணவர் படுகொலை தொடர்பாக  எழுதிய செய்'திகள் மற்றும் கட்டுரைகளின் எதிரொலியாகவே பாதுகாப்பு தரப்பின்  பின் புலத்தில்  இவர் சுடப்பட்டதாக  அவ்வேளை இவரது குடும்பத்தினராலும் சக ஊடகவியலாளர்களினாலும்  தெரிவிக்கப்பட்டிருந்தது.