கிழக்கில் யுத்த பாதிப்புகளை எதிர்கொண்ட வைத்தியசாலைகள் புனரமைக்கப்படும் -சுகாதார அமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் யுத்த பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளை மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுடன் இணைந்து புனரமைப்பதற்கான பணியை முன்னெடுத்துவருவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை கண்டறியும் வகையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை கடந்த காலங்களில் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவருவதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் இந்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின்போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா,இரா.துரைரெட்னம் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் அல்மேடா அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் வைத்தியசாலையின் பல்வேறு பகுதிக்கும் அழைத்துச்சென்று காண்பித்தார்.

இந்த வைத்தியசாலையில் தமிழ் முஸ்லிம் மக்கள் நன்மை பெற்றுவந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மாத்திரைகளைப்பெற்றுக்கொள்வதிலும் பெரும் அசௌகரியங்களைப்பெற்றுக்கொண்டதாக வைத்தியசாலை நிர்வாகத்தினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன் அம்பியுலன்ஸ் சேவை,எக்ஸ்ரே இயந்திரம் இருந்தும் அதனை பாவிப்பதற்கான வசதிகள் செய்யப்படாமை உட்ட ஆளணி பிரச்சினை,பௌதிக வளப்பிரச்சினைகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையினை புனரமைப்புச்செய்வதாயின் அவற்றினை தரமுயர்த்தவேண்டிய தேவையிருப்பதாக வைத்திய அத்தியசகரினால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,குறித்த வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை தீர்த்துவைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுப்பதாகவும் வைத்தியசாலையினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதகவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த வைத்தியசாலையில் நிலவும் அனைத்து குறைபாடுகளை நிவர்த்திசெய்ய நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் யுத்த பகுதிகளில் இருந்த வைத்தியசாலைகளை புனரமைப்பதற்கான தேவையுள்ளதாகவும் அவற்றினை மாகாண மத்திய அரசாங்கத்துடன் இணைந்து புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியமர்ந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகளை புனரமைக்கவேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.