ஓந்தாச்சிமடம் கற்பக விநாயகர் ஆலயத்தின் தெப்பத்திருவிழா

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழாவின் தெப்பத்திருவிழா நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

ஓந்தாச்சிமடம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கடல் அன்னையின் தாலாட்டும் மட்டுவாவியின் அரவணைப்பும் கொண்டதாக வரலாற்றினை சுமந்ததாக இராஜகோபுரத்துடன் காண்போரை ஈர்க்கும் வகையில் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயம் விளங்கிவருகின்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களின் தலைமையில் வருடாந்த மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

இந்த உற்சவத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சப்புறத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

நேற்று மாலை அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தின் தர்மகர்த்தாவும் சொர்ணம் குழுமங்களின் தலைவருமான தேசமான்ய மு.விஸ்வநாதன் தலைமையில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு வாவியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டார்.

பெரியகல்லாறு விரை இந்த ஊர்வலம் கொண்டுசெல்லப்பட்டதுடன் பெரியகல்லாறு கடலாச்சியம்மன் ஆலயத்திலும் விசேட பூஜைகள் நடைபெற்று மீண்டும் தெப்பம் ஆலயத்தினை வந்தடைந்தது.

ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெற்றது.