சமுத்திரத்திற்குள் ஆண்டு ஒன்றுக்கு 08 மில்லியன் தொன் பிளாஸ்டிக் சேருகின்றது –சிரேஸ்ட விரிவுரையாளர் திருச்செல்வம்

உலகளாவிய ரீதியில் ஒரு ஆண்டு எட்டு மிpல்லியன் மெட்றிக் தொன் பிளஸ்டிக்,பொலித்தின் சமுத்திரத்தில் சேருகின்றது.இந்த அளவில் பொலித்தின்கள் தொடர்ந்து சமுத்திரத்தினை வந்தடையுமாகவிருந்தால் 2050ஆம் ஆண்டளவில் சமுத்திரத்தில் மீனின் அளவினை விட பொலித்தினின் அளவு அதிகமாக இருக்கும் என சூழலியல் ஆய்வாளரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி ரி.திருச்செல்வம்; தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் பொலித்தின் பாவனையினை ஒழிக்கும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

உலகளாவிய ரீதியில் ஒரு ஆண்டு எட்டு மிpல்லியன் மெட்றிக் தொன் பிளஸ்டிக்,பொலித்தின் சமுத்திரத்தில் சேருகின்றது.இந்த அளவில் பொலித்தின்கள் தொடர்ந்து சமுத்திரத்தினை வந்தடையுமாகவிருந்தால் 2050ஆம் ஆண்டளவில் சமுத்திரத்தில் மீனின் அளவினை விட பொலித்தினின் அளவு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த அளவுகள் குறைக்கப்படவேண்டிய அவசியம் உள்ளது.அதற்கான அடிகோலை நாங்களும் ஏற்படுத்தவேண்டும்.சூழல் மாசடைவதற்கு பிரதான இடத்தினை இந்த பொலித்தின்,பிளாஸ்டிக்பொருட்கள் கொண்டுள்ளன.
இந்த பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு மட்டக்களப்பு மாநகரசபை மட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும்.

இந்த பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் புதைக்கப்படுவதன் காரணமாக அது உக்காத நிலையில் நிலத்தடி நீரில் கலக்ககூடிய நிலையேற்படும்.அதுமட்டுமன்றி இன்று சில பறவைகள்,விலங்குகள் பொலித்தினை உள்வாங்கி வாழ்ந்துவருகின்றது.மட்டக்களப்பில் கல்லடிப்பகுதியில் உள்ள சில நாய் மற்றும் மாடுகளை ஆய்வுசெய்தபோது அவையின் வயறுப்பகுதிகள் பொலித்தினால் நிரம்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.அதுதொடர்பில் ஆய்வுகளை நான் மேற்கொண்டுவருகின்றேன்.

எனது தந்தையின் காலத்தில் நீரை ஆறு மற்றும் குளங்களில் பெற்றனர்.எனது காலத்தில் கிணறுகளில் இருந்து பெற்றேன்.எனது மகளின் காலத்தில் டப்களிலும் குடிநீர் குழாய்களிலும் பெற்றனர்.எனது பேரப்பிள்ளையின் இன்றைய காலத்தில் போத்தல்களில் குடிநீரைபெற்றுக்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது.

இதேபோன்று எதிர்வரும் பத்து ஆண்டிற்கு பின்னர் பாடசாலைக்கு செல்லும் பிள்ளை செயற்கை வாயுவினைக்கொண்ட ஒட்சிசன் சிலிண்டர்களையும் கொண்டுசெல்லும் நிலையேற்படும்.எமது சந்ததி செயற்கையாக சுவாசிக்கும் நிலை இந்த பூகோளத்திற்கு வரும் நிலையுள்ளது.

இவற்றையெல்லாம் தடுப்பதற்கான முதல் உபாயமாக இந்த பொலித்தின் பாவனை தடையினை நாங்கள் கொள்ளமுடியும்.மாநகசபைதான் இதற்கு எல்லாம் பொறுப்பு என்ற பிழையான எண்ணத்தில் இருந்து நாங்கள் வெளியில் வரவேண்டும்.நானும் பொறுப்பு என்பதை மனதில் கொள்ளவேண்டும்.