மட்டக்களப்பு நகரில் சுகாதார பிரிவினால் பெருமளவான பாவனைக்குதவாத பொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையங்களில் பொதுச்சுகாதார பகுதியினரால் இன்று காலை முதல் மேற்கொள்ள்பட்டுவரும் திடீர் சேதனை நடவடிக்கைகளின்போது சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் மற்றும் பாவனைக்குதவாத பெருமளவு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.


இன்று  வெள்ளிக்கிழமை காலை 9.00மணி தொடக்கம் மட்டக்களப்பு வெட்டுக்காடு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான வா.ரமேஸ்குமார்,டி.ராஜாரவிவதர்மா ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு நகரில் சுகாதாரத்திற்கு கேடான பொருட்கள் விற்பனைசெய்யப்பட்டுவருவதாக பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது உணவு விடுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக  வெட்டுக்காடு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.அமுதமாலன் தெரிவித்தார்.

இதன்போது சுகாதாரத்திற்கு தீங்கா முறையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவு பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் பாவனைக்குதவாத பொருட்களும் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

பொதுமக்களின் சுகாதாரத்தினை கருத்தில்கொண்டு இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பல தடவைகள் வர்த்தகர்கள் அழைக்கப்பட்டு உணவு பாதுகாப்பு தொடர்பில்அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் சிலர் அவற்றினை கவனத்தில் கொள்வதில்லையெனவும் பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.