மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் 100 பாணைகள் கொண்ட அசத்தல் பொங்கல்

(லியோன்)

தமிழர்களின் மிகவும் முக்கியத்துவமான மாதங்களில் ஒன்றாக கருதப்படும் தைமாதத்தில் தமிழர்களின் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 100 பொங்கல் பானைகள் பொங்கி படைக்கும் நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் இந்த நிகழ்வு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றன.

பொதுமக்களுக்கும் பிரதேச செயலகத்துக்கும் இடையிலான இணைப்பினை வலுப்படுத்தும் வகையில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 100 அமைப்புகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டன.

இந்த பொங்கல் நிகழ்வில் இஸ்லாமிய மற்றும் பறங்கியர் இனத்தினை சேர்ந்தவர்களும் கலந்துசிறப்பித்தனர்.

இதன்போது பிரதேச செயலகத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க பொங்கல் படைக்கப்பட்டு பூசைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து பிரதேச செயலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி கலந்துசிறப்பித்தார்.

இதன்போது பிரதேசத்தில் உள்ள வறிய மாணவர்கள் 28பேருக்கு திவிநெகும திணைக்களம் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் பிரதேச செயலக சமூகசேவை திணைக்களம் ஊடாக நான்கு வறிய குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வாழ்வாதார உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் கிராமிய மணம் கவிழும் கலை நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.