கிழக்குப் பல்கலைக்கழகம் மீது சேறுபூசும் செயற்பாட்டில் ஈடுபடுவதை விடுத்து கல்வி ரீதியாக வளர்ச்சியடைந்துவருவதை ஊக்குவிப்பவர்களாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்த கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, எனது நிருவாகத்தில் ஊழல் நடைபெறுவது தொடர்பாக நிருபித்தால் உடனடியாகவே பதவி விலகத்தயார் எனவும் சவால் விடுத்தார்.
கிழக்குப் பல்கலைக்கழம் குறித்து வெளியான செய்திகள் குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்றைய தினம் சனிக்கிழமை மாலை மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இதன்போது, கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன், வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி கலாநிதி என் லோகேஸ்வரன், கலைப்பீடாதிபதி கலாநிதி கே.ராஜேந்திரம், சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி வைத்தியக்கலாநிதி ரி.சுந்தரேசன், விவசாயப்பீடாதிபதி கலாநிதி எஸ்.சுதர்சன், விஞ்ஞானபீட பதில் பீடாதிபதி கலாநதி திருமதி முத்துலட்சுமி வினோபாவா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கடந்த 30 வருட யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு பின்தங்கியிருந்த எமது பல்கலைக்கழகமானது கடந்த சில வருடங்களாக எனது நிருவாகத்தின் கீழ் மிகவும் சிறப்பான முறையில் அபிவிருத்தியடைந்து வருவது யாவரும் அறிந்ததே.
எனது பதவிக்காலத்திற்கு முன்பு கடமையாற்றிய ஆறு உபவேந்தர்களும் தமது பதவிக்காலம் முடிவடையும் முன்பு இங்குள்ள சிலரால் திட்டமிட்டு துரத்தப்பட்ட வரலாறு மட்டக்களப்பு மக்கள் அறிந்ததே. அந்த வகையில் ஏழாவது உபவேந்தரான என்னையும் எனது பதவிக்காலம் முடியும் முன் துரத்திவிட திட்டமிட்டு செயற்படும் நிலைமிகுந்த வேதனையளிக்கின்றது.
கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டட வேலைகள் சம்பந்தமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உபவேந்தர் என்ற வகையில் எனக்குள்ளது.கடந்த வருடத்தின் ஜுலை மாதத்தில் கௌரவ உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அவர்களினால் அடிக்கல் நடப்பட்ட கட்டட வேலைகள் இப்போது பிள்ளையாரடியில் முழுவேகத்துடன் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இரண்டு லோட் மண்கள் மாத்திரம்தான் இதுவரை வந்து சேர்ந்துள்ளது என்று கூறியிருப்பது மக்கள் மத்தியில் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயலாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது. கட்டட ஒப்பந்த காரர்களுக்கு வேலைகளை ஒப்படைப்பதற்கு முன்பு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசங்கள் தேவைப்படுவது யாவரும் அறிந்ததே.
கிழக்குப் பல்கலைக்கழத்திலும், திருகோணமலை வளாகத்திலும் மற்றும் சுவாமி விபுலானந்த நிறுவகம் மற்றும் மருத்துவ பீடத்திலும் நடைபெற்று வருகின்ற பாரிய அபிவிருத்திகளை கௌரவ பாராளுமனற உறுப்பினர் ஒருமுறையேனும் பார்த்திருப்பாரேயானால் இவ்வாறானதொரு தவறான உரையினை பாராளுமன்றத்தில் நிகழ்த்தியிருக்க மாட்டார்.
கிழக்குப்பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்று வந்த ஊழல்கள் அனைத்தும் எமது நிருவாகத்தின் கீழ் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டு கல்விசார் நடவடிக்கைகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவது இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
இதுபோன்ற சேறு பூசுகின்ற உரைகளோ அறிக்கைகளோ எமது பல்கலைக்கழக அபிவிருத்திக்கான பயணத்தில் எதுவித பாதிப்புகளையும் ஏற்படுத்தப்போவதில்லை.
கிழக்குப் பல்கலைக்கழகத்தை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக மாற்றி எமது மாணவர்களுக்கும் எமது பிராந்தியத்திற்கும் சிறந்த சேவைகளை வழங்கும் எமது உறுதியான நோக்கம் எவ் இடையூறுகள் வந்தபோதிலும் தளராமல் தொடரும் எனத் தெரிவித்தார்.
இதன்போது பல்கலைக்கழகத்தின் அனைத்துபீடங்களிலும் நடைபெற்று வரும் அபிவிருத்தி செயற்பாடுகள், பௌதீக ரீதியான, கல்வி ரீதியான மேம்பாடுகள் குறித்து பதிவாளர், பீடாதிபதிகளும் கருத்துக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.