மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்கப்பட்ட 1179 பேருக்கு இன்று நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.
பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவத்திற்கான கருத்திட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உள்ள டேபா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் இந்த நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுக்கு பொருளாதார அபிவிருத்திப பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறப்பினர் சிப்லி பாறுக் மற்றும் பிரதேச செயலாளர்கள்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள்,உதவி அரசாங்க அதிபர் மற்றும் அரச உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2000பேர் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக இந்த 1179பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு இந்த வருட இறுதிக்குள் வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களில் கடமையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.