மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தூர இடங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களிடையே இடம்பெறும் போட்டித்தன்மைகளினால் ஏற்படும் பிரச்சினைகளினால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றனர்.
இந்த தனியார் பஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு மாறாக போட்டிக்கு செல்வதனால் தனியார் பஸ்களிடையே பல்வேறு பிரச்சினைகள் எழுவதுடன் பொலிஸ் நிலையங்களுக்கு செல்லும் நிலை கூட ஏற்படுகின்றது.
இதன் காரணமாக பல்வேறு வேலைகளுக்காக தூர இடங்களுக்கு செல்லும் பிரியாணிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு மற்றும் அக்கரைப்பற்றுக்கு செல்லும் பஸ்களிடையே வந்தாறுமூலை பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறி இரு பஸ்களும் வீதியின் நடுவே நிறுத்தப்பட்டு பிரச்சினைகள் நடைபெற்றதல் இரு மருங்கிலும் அரை மணிக்கு மேல் வாகனங்கள் வரிசையில் தரித்து நின்றதை காணமுடிந்தது.
அதுமட்டுமன்றி குறித்த பஸ்ஸில் பயணம் செய்தவர்களும் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலையேற்பட்டது.
இதில் நேர்முகத்தேர்வுக்கு செல்லவுள்ளோர்,வைத்தியசாலைக்கு செல்லவுள்ளோர்,அன்றாட கூலித்தொழிலுக்கு செல்லவுள்ளோர் என பல்வேறு பட்ட தொழில் துறைக்கு செல்வோரும் நீண்ட நேரம் காத்திருந்து தமது கடமையினை நிறைவேற்ற முடியாத நிலையேற்பட்டது.
இறுதியில் அப்பகுதிக்கு வந்த ஏறாவூர் பொலிஸார் இரு பஸ்களையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றபோதே போக்குவரத்துகள் இடம்பெற்றன.
அண்மைக்காலமாக தனியார் பஸ்களிடையே நிலவும் இவ்வாறான ஆரோக்கியமற்ற நிலை தொடர்பில் உரிய தரப்பினர் தகுந்த நடவடிக்கையெடுத்து பொதுமக்களுக்கான சேவை சிறப்பாக நடைபெறுவதற்கான உறுதிமொழிய வழங்கவேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.