(யனோபன்)
மட்டு நங்கையின் பெருமையினை பாடல் வரிகள் மூலம் உலகை கொள்ளை கொண்ட கலைஞன் ஜீவம் யோசப் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இசை கலைக்கு மாத்திரமன்றி சிற்ப கலைக்கும் தொண்டாற்றிய உண்மைக் கலைஞன். மட்டு நகரின் வெள்ளை பாலத்தில் நிறுவப்பட்டுள்ள திருவளுவர் சிலை இவரது படைப்பாகும்.
மட்டு நகரில் முதல் மெல்லிசை குழுவமைத்து பிரபலம் பெற்றவர்,இவரும் சகோதரர் ஞானம் அவர்களும். 1960களில் மட்டு நகர் முழுவதும் இவர்களது மெல்லிசை உலா வந்தது. உணர்ச்சி கவிஞன் காசி ஆனந்தன் உடைய "மீன் மகள் படுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான மேடையம்மா ......" எனும் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் திரு .ஜீவம் யோசப் அவர்கள்.
”மீன்பாடும் வாவியிலே ஓடம் விடுவோம்-நாம்
தேனூறும் தமிழிசையை பாடிடுவோம்”
“இதய கீதம் ஓய்வதில்லை”
“கோட்டமுனை பாலத்திலே கச்சான் காத்தடி-நீ
கொட்டாஞ்சட்டை போட்டுக்கிட்டு போவதேனடி”
“சின்னமாமா என் சீனிமாமா-உன்
சின்னமகள் என்னை பார்த்து சிரிக்கலாமா”
“எந்நாளும் உனக்காக பாடுகிறேன்
என்னுயிரே உன் நினைவில் வாடுகிறேன்” ….. போன்ற பாடல்களுக்கு தனது மெல்லிசையால் உயிரோட்டம் வழங்கியிருந்தார் ஜீவம் யோசப் அவர்கள்
மட்டு நகரில் பண்ட் வாத்திய இசையினை அறிமுக படுத்தியதுடன் புனித மிக்கல் கல்லூரியில் பண்ட் வாத்திய குழுவினை நிறுவ முன் நின்று உழைத்தவர் திரு.ஜீவம் அவர்கள். இவ் உன்னதமான கலைஞனுக்கு எமது இதய அஞ்சலிகள் கோடி கோடி.......

