திறன் அபிவிருத்திப் பயிற்சிகளை நிறைவு செய்யாதவர்களுக்கான பயிற்சிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களில் இதுவரை திறன் அபிவிருத்திப் பயிற்சிகளை நிறைவு செய்யாதவர்களுக்கான பயிற்சிகள் எதிர்வரும் 5ஆம்திகதி முதல் 11ஆம்திகதி வரை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின், 2013ஆம் இலக்க கடிதத்தின் அறிவுத்தல்களுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன. இந்தப் பயிற்சிகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட திட்டமிடல் செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ். முரளிதரன் ஈடுபட்டு வருகிறார்.

அமைச்சின் கீழ் இணைக்கப்பட்ட 457 பட்டதாரி பயிலுனர்களிலிருந்து சுயவிருப்பத்தின் அடிப்படையில் 370 பேருக்கு திறன் அபிவிருத்தி பயிற்சி திட்டம் எம்பிலிபிட்டிய, மாதுறு ஓயா, மின்னேரியா, சீனன்குடா ஆகிய நான்கு பயிற்சி நிலையங்களில் 02 வாரகால பயிற்சி கடந்த மே 8ஆம் திகதி முதல் நடைபெற்றிருந்தன.

அதேநேரம், மிகுதியான ஒரு தொகுதியினருக்கு கடந்த மாதம் 13ஆம் திகதிமுதல்  29திகதிகளில் மாதுருஓயாவில் நடைபெற்றிருந்தது.

ஆனாலும், இப்பயிற்சி நெறியிலிருந்து கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடைய தாய்மார்கள் மற்றும் சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவர்கள், தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஒரு தொகை பட்டதாரி பயிலுனர்களுக்கு இப்பயிற்சி நெறிக்கு கலந்து கொள்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது.

இவர்களுக்கே  எதிர்வரும் 5ஆம்திகதி முதல் 11ஆம்திகதி வரையில் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. என்றும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.