கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் நிர்வாகத்தை அனுராதபுர மாவட்டத்தின் ராஜரட்ட பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதாக – திருகோணமலை வாழ் தமிழ் புத்திஜீவிகளும், கல்வி ஆர்வலர்களும், திருகோணமலை தமிழ் சமூகத்தினரும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகச் செயற்பட்டு வரும் திருகோணமலை வளாகம், கிழக்கிலங்கைக்குக் கிடைத்துள்ள அரியதொரு வரப்பிரசாதம் மட்டுமல்லாது, திருகோணமலை மாவட்டத்திற்கான உயர் கல்வித்துறை நிறுவனங்களில் தலையாயதுமாகும்.
இந்த வளாகம், திருகோணமலை மாவட்டத்துக்கு ஆற்ற வேண்டிய கடப்பாடுகள் நிறையவுள்ள நிலையிலும், இந்த வளாகம் தனித்ததொரு பல்கலைக்கழகமாக உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்ற சூழலிலும் - இந்த வளாகத்தை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டமைப்பிற்குள்ளிருந்து பிரித்து, ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவருவதான முயற்சிகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
ராஜரட்ட பல்கலைக்கழகத்துடன் திருகோணமலை வளாகம் இணைக்கப்படுமிடத்து அது முழுமையாக தனது அடையாளத்தை இழக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறான முயற்சிகள் ஆரம்பகட்டத்திலேயே தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கிழக்கிலங்கைக்கு உரித்தான இக்கல்வி வளம் தொடர்ந்தும் கிழக்கிலங்கைக்கே உரித்தானதாக தொடரப்படும் அதேவேளை, திருகோணமலை வளாகத்தை ஒரு பல்கலைக்கழகமாக உருவாக்குவதிலும் - கிழக்குப்பல்கலைக்கழகம் தனது ஆக்கபூர்வமான கடமையைச் செய்ய முன்வரவேண்டும் எனவும் திருகோணமலை வாழ் தமிழ் புத்திஜீவிகளும் தமிழ் ஆர்வலர்களும், திருகோணமலை தமிழ் சிவில் சமூகத்தினரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த முயற்சிகளில் அரசியல், இன, மத பேதமற்று அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர்கள் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
