கனடாவில் வசிக்கும் பிரபல கவிஞையும், உள வளத்தணையாளருமான சுல்பிகா இஸ்மயில், சிறுகதை எழுத்தாளரும் நாடக நெறியாளரும், குறுந்திரைப்பட நெறியாளரும் நடிகையுமான சுமதி ரூபன் ஆகியோருடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு சூரியா பெண்கள் நிலையத்தில் நடைபெற்றது.
இதில்பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, சூரியா பெண்கள் நிலையத்தின் தலைவி, உத்தியோகத்தர்கள், மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது, சுமதி ரூபனின் மனுசி குறுந்திரைப்படம் திரையிடப்பட்டதுடன், அதனையடுத்து இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இங்கு சுமதி ரூபன் மௌனத்தை மொழியாகக் கொண்டமை தொடர்பில், மௌனத்தின் பலமும் அதன் வலிய தன்மையும் பற்றிய விடயங்கள், நாடக நெறியாளராக வளர்வது குறித்தும் தெரிவித்தார்.
அதே நேரம், சுல்பிக இஸ்மயில் பெண்களுக்கெதிரான வன்முறைகள், பற்றியும் அதற்கான சமூகக் காரணங்கள் பற்றியும், புலம்பெயர் சிக்கல்கள் எவ்வாறு பெண்களின் குடும்ப வாழ்வில் தலையிடுதல் தொடர்பிலான கருத்துக்களை வெளியிட்டார்.
இதேவேளை இன்று பிற்பகல் பேராசிரியர் மௌனகுருவின் அரங்க ஆய்வுகூடத்துக்கும் சென்ற அவர் அதன் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கலைத்துறை வளர்ச்சிக்கு அது ஆற்றிவரும் பங்களிப்புகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்ட அவர்,அரங்க ஆய்வுகூடம் தொடர்பான ஆவனப்படத்தினையும் பார்வையிட்டார்.
