மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்டுகழங்களுடனான கலந்துரையாடல் இன்று மட்;டக்களப்பில் இடம்பெற்றது.
கல்லடியில் உள்ள 23வது படைப்பிரிவின் கட்டளை மையத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட 231வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேணல் சுகத்த திலகரட்ன,மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்க தலைவர் பாரூக்,செயலாளர் பிரதீபன் உட்பட விளையாட்டுக்கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பங்களிப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது விளையாட்டுத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அண்மையில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை மையத்தினால் நடத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் மூலம் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் உள்ள உறவு நிலை தொடர்பில் ஆராயப்பட்டது.
அத்துடன் அந்த சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கான காசோலைகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட 231வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேணல் சுகத்த திலகரட்ன,
வெற்றி தோல்வி என்பது அனைவருக்கும் உரியது.இந்த விளையாட்டுப்போட்டியின் மூலம் சகோதரத்து உறவு சிறந்த முறையில் கட்டியெழுப்பமுடியும்.
அனைத்து சமூகமும் ஒன்றிணைந்து நடத்திய இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மூலம் இராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு பலமடைந்துள்ளது.
கடந்த காலத்தில் பல விளையாட்டுப்போட்டிகளை இராணுவம் நடத்தியுள்ளதுடன் பல பயிற்சி முகாம்களையும் நடத்தியுள்ளது.ஆனால் இம்முறை முதன்முதலாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை நடத்தியுள்ளது.
இதன் மூலம் இனங்களுக்கிடையிலான உறவும் பொதுமக்கள் -இராணுவத்துக்குமான உறவும் வளர்ந்துள்ளது.இந்த உறவை தொடர்ந்து வளம்பெறும் வகையிலான செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளோம்.
இராணுவத்துக்கு விளையாட்டுப்போட்டியை மட்டும் நடத்துவது நோக்கமல்ல.இராணுவ வீரர்கள் என்ற வகையில் மக்களுடன் இணைந்து ஏனைய துறைகளையும் வளர்ச்சி நிலைக்கு கொண்டுசெல்வதே நோக்கமாகும்.
ஒரு நாட்டின் படையினர் என்ற வகையில் பொதுமக்களுடனான உறவை ஏற்படுத்தி பொதுமக்களின் தேவையினை பூர்த்திசெய்வதற்கு தேவையான பங்களிப்பினை வழங்குவோம்.
பொதுமக்களின் தேவைகளில் முக்கியமாக அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளையும் இராணுவம் இந்த நாட்டில் மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.