மோட்டார் சைக்கிளில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்கும் சட்டத்தை தளர்த்துவதாக உத்தரவாதம்

(எம்.என்.நூர்)

மட்டக்களப்பு மாவடடத்தில் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்க வேண்டுமென்ற சட்டத்தை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்க வேண்டுமென மோட்டார் போக்குவரத்து பொலிசார் வற்புறுத்தி வருகின்றனர்.

அத்தோடு இவ்வாறு செல்லாதவர்களுக்கெதிரக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் போக்குவரத்து பொலிசார் நடவடிக்கை எடுப்பதற்கு முற்படுகின்றனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் இதனால் எதிர் நோக்கும் சிரமங்கள் குறித்து அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சுட்டிக்காட்டி மட்டக்களப்பு பெண்களின் கலாசார உடை மற்றும் அந்த உடைகளை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் பெண்கள் பின் ஆசனத்தில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிப்பதிலுள்ள சிக்கல்;கள் குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த விடயம் தொடர்பில் உடனடியாக இந்த சட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் தளர்த்துவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தன்னிடம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மோhட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்களை கட்டாயமாக இரண்டு கால்களையும் இரண்டு பக்கமும் போட்டுச் செல்ல வேண்டுமென்ற சட்டத்தை போக்குவரத்து பொலிசார் நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறி;ப்பிடத்தக்கது.