முஸ்லிம்களின் புனித பள்ளிவாயல்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் பௌத்த தீவிர வாதிகள் நடாத்திவரும் தாக்குதலை காத்தான்குடி நகர சபை வன்மையாக கண்டித்துள்ளது.
காத்தான்குடி நகர சபைக் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸபர் தலைமையில் நடைபெற்ற போது இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கன்டனத் தீர்மானத்தை நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் சபையில் மும்மொழிந்தார் இத்தீர்மானத்தை காத்தான்குடி நகர சபை ஏகமனதாக அங்கீகரித்தது.
முஸ்லிம்களின் புனித பள்ளிவாயல்கள் மீது பௌத்த தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதலை நடாத்திவருகின்றனர். இந்த புனிதமான றமழான் மாதத்திலும் கூட மஹியங்கனை பள்ளிவாயல் மீது தாக்குதல் நடாத்தியதுடன் அப்பள்ளிவாயலையும் மூடிவிட்டுள்ளனர். அத்தோடு இறைச்சி லொறியொன்றையும் பௌத்த தீவிரவாதிகள் நெருப்பு வைத்து தீக்கிரையாக்கியுள்ளனர்.
இவ்வாறு முஸ்லிம்களின் புனித வழிபாட்டுத்தளங்களான பள்ளிவாயல்கள் மீது தொடாச்சியாக நடாத்தப்பட்டுவரும் தாக்குதலை காத்தான்குடி நகர சபை வன்மையாக கண்டிப்பதுடன் இதன் பின்னணியில் செயற்பட்டுவருபவர்களை அரசாங்கம் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதை அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இவ்வாறான சம்பவங்களினால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலைமையில் அரசாங்கம் முஸ்லிம்களுக்கெதிராக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இக்கண்டன தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் நிர்மானிக்கப்பட்டுள்ள வீதிகளில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதால் அவ்வீதிகளின் தரத்தினை காத்தான்குடி நகர சபை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அவ்வீதிகளை பராமரிப்பதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் நகர சபை பொறுப்பேற்கும் போது பராமரிப்பு செலவையும் காத்தான்குடி நகர சபை வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் கோர வேண்டுமென நகர சபை உறுப்பினர் றஊப் ஏ மஜீத் முன் வைத்த மும்மொழிவையும் சபை ஏற்றுக் கொண்டு இவ்வீதிகளில் ஏற்பட்டுள்ள பிழைகளை உடனடியாக வீதி அபிவிருத்தி திணைக்களம் சீர் செய்ய வேண்டுமென கோருவதுடன் இவ் வீதிகளை காத்தான்குடி நகர சபை பொறுப்பேற்கும் போது சில நிபந்தனைகளுடனேயே பொறுப்பேற்க வேண்டுமெனவும் ஏகமனதாக இதன் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் இம் முறை நோன்புப் பெருநாள் பசாரை (பெருநாள் ஒன்று கூடலை)காத்தான்குடி சின்னப்பள்ளிவாயல் பகுதியில் ஆற்றங்கரை ஓரம் செய்வதெனவும் தீர்;மானிக்கப்பட்டது.
நேற்றைய காத்தான்குடி நகர சபை அமர்வில் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், மற்றும் நகர சபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், றஊப் ஏ மஜீட், அலி சப்ரி, எம்.எஸ்.சியாத்,அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல், எம்.நசீர், சல்மா அமீர் ஹம்சா ஆகிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
