விவசாயிகளுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயம்:ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விவசாய சங்க கூட்டத்தில் விவசாயிகளுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் இருவர் காயமடைந்துள்ளதுடன் இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வந்தாறுமூலையில் நேற்று வியாழக்கிழமை மாலை  வந்தாறுமூலை பிரதேச விவசாய சங்க நிர்வாகத் தெரிவு கூட்டம் இடம்பெற்றபோது விவசாயிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் வந்தாறுமூலையைச் சேர்ந்த (வயது 52) சுப்பிரமணியம் சின்னமணி என்பவரே செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் மற்றையவர் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிலரை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.