மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலைக்கு நிரந்தரப் பணிப்பாளர் நியமனம்


மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலை, ராகமை போதனா வைத்தியசாலை, பொரளை சீமாட்டி ரிச்வே சிறுவர் போதனா வைத்தியசாலை, பேராதனைப் போதனா வைத்தியசாலை மற்றும் களுபோவிலை போதனா வைத்தியசாலை ஆகியவற்றுக்கான நிரந்தரப் பணிப்பாளர்கள் இன்று (02) திங்கட்கிழமை சுகாதார அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் சுகாதார அமைச்சில் வைத்து இன்றையதினம் காலை 10 மணியளவில் வழங்கிவைக்கப்பட்டன.

அவ்வகையில், கிழக்கு மாகாணத்தின் ஒரே ஒரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலைக்கு வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் நிரந்தரப் பணிப்பாளராக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேற்குறிப்பிட்ட ஐந்து வெற்றிடங்களுக்கும், இருபது விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களில் பதினெட்டு விண்ணப்பதாரிகள் சுயாதீன நடுவர் சபையின் நேர்முகப் பரீட்சைக்கு கடந்த மாதம் 16 ஆம் திகதி தோற்றியிருந்தனர்.

இவர்களில் சேவைமூப்பு, கடந்த காலங்களில் இவர்கள் சுகாதார சேவையினை மேம்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்திய புத்தாக்கத் திட்டங்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆய்விதழ்களில் பிரசுரமான இவர்களது சுகாதார ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றிற்குப் புள்ளிகள் வழங்கப்பட்டு, அவர்களுள் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களே இன்று நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.