அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கள்ளியந்தீவு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலயத்தின் பாலாலய கும்பாபிஷேகத் திருவிழா நாளை (12) வியாழக்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இவ்வாலயத்தின் பாலாலயக் கிரியைகள் சிவஸ்ரீ க.கு. சிதாராமக் குருக்கள், சிவஸ்ரீ க.கு. சச்சிதானந்த சிவம் குருக்கள் தலைமையில் பாலஸ்தாபன பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம கோவர்த்தன குருக்கள், ஆலய குரு ஐ. ஜெயபிரசாந்சர்மா மற்றும் ஆலய பிரதமகுரு பூஜாசுடர் சபாரெத்தினம் குணசேகரசர்மா மற்றும் உப குருமார்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளனர்.
இதற்கமைய, நாளை வியாழக்கிழமை காலை 5.00 மணிக்கு சிவாச்சாரியார் வர்ணம், விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், அனுக்ஞை, பேரி தாடனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கங்காதீர்த்த சங்கிரணம், சூரியார்க்ணி சங்கிரணம் ஆகிய கிரியைகள் இடம்பெறவுள்ளன.
அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கீரணம், அங்குரார்ப்பணம், தீபபூஜை, கடஸ்தாபனம், கலாகர்ஷணம், சன ஹோமம் ரிஷபபூஜை கும்பயாகசாலைப் பிரவேசம், யாகபூஜை, தீபாராதனை, வேததோத்திரபாராயணம், திருமுறைப் பாராயணம் உள்ளிட்ட கிரியைகள் நடைபெறவுள்ளதுடன், மூர்த்திகள் பாலாலய ஸ்தாபனமும் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து, 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 5.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், விசேட திரவிய ஹோமம், உபசார ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, வேததோத்திரபாராயணம், திருமுறைப் பாராயணம், ஆசிர்வசனம் ராகதாளசமர்பணசகிதம் பிரதான கும்பம் பாலாலய பிரவேசம் உள்ளிட்ட கிரியைகள் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து அன்றைய தினம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரையிலான புண்ணிய சுபமுகூர்த்த வேளையில் பிரதான கும்ப பாலாலயப் பிரவேசத்துடன் பாலாலய கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மகா நைவேத்தியம், விசேட அலங்கார பூஜை, குரு ஆசீர்வாதம் மற்றும் விபூதி பிரசாதம் வழங்குதல் ஆகியன இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வுகளில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு அம்பிகையின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
.jpeg)

.jpeg)
.jpeg)