இலங்கையின் கல்விச் சிந்தனையில் மகாத்மாகாந்தியின் பங்கு.



சீர்தூக்கி போற்றப்படும் சிந்தனையாளர்களுள் மகாத்மாகாந்தியும் ஒருவராவார்.

இவர் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர் என்றுதான் அனேகமானோர் கருதுகின்றனர் ஆனால் அவரிடம் பொதிந்திருந்த கல்விக் கருத்துக்களை நம்மவர்கள் சீர்தூக்கிப் பார்ப்பது இல்லை.

இவரது கல்விச் சிந்தனைகள் கீழைத்தேசத்தில் பாரதத்தில் மட்டும் அன்றி இலங்கையின் கல்விக் கடலிலும் பரந்திருப்பதைக் காண முடிகின்றது.

அந்த வகையில் மகாத்மாகாந்தியின் கல்வி சிந்தனையானது முக்கியத்துவம் பெறுகின்றது.

பாரதத்தை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் தமக்கு விசுவாசமானவர்களையும் தமது தேவைகளையும் நிறைவு செய்யக் கூடிய ஆங்கிலம் கற்ற உயர் வர்த்தகத்தினரை உருவாக்குவதை நோக்காகக் கொண்டிருந்தனர்.

இது சாதாரண மக்களிடையே பாரிய இடைவெளியை ஏற்படுத்தியது இம்முறையானது சொந்த நாட்டியே அந்நியர் போன்ற உணர்வை ஏற்படத்தியது. இதனாலேயே காந்தியடிகள் “இந்தியர்கள் உடலால் மட்டும் அன்றி உள்ளத்தாலும் அடிமைப்பட்டுள்ளனர்” என்று கூறினார். இதை உடைத்தெறிவதற்கு ஒரே வழி “கல்வி” ஒன்றே என தனது சிந்தனைக்கு வலுவுட்டினார்.

அவ்வகையில் காந்தியின் கல்விச் சிந்தனைகள் ஒவ்வொன்றும் அறிவுலக சிந்தனைகளில் நிலைகொள்ளாது செயன்முறைகளில் நாட்டங்கொண்டனவாகக் காணப்படுகின்றது.

 இலங்கையில் கல்விச் சீர்திருத்ததில் ஆரம்ப வகுப்புக்களில் முதன்மை நிலை ஒன்று தொடக்கம் உயர்தரம் வரையில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் செயன்முறைக் கல்வி முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. இக்கருத்து மகாத்மாகாந்தியின் கல்விச் சிந்தனையின் சாயலைக் காட்டுகின்றது.

மேலும் இவர் ரூசோவைப் போன்று குழந்தையின் செயற்பாடுகளுக்கு முக்கிய இடம் வழங்கப்படுவதோடு குழந்தைக்கு வழங்கப்படும் கல்வியானது குழந்தையின் ஆன்மீக, அறிவியல், உடல் திறன்களை வெளிக்கொண்டு வருவதாகவும் ஆளுமையை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் முன் வைத்தார்.

காந்தியின் கல்விச் சிந்தனைகளில் ஆணிவேராகக் காணப்படுகின்றவர்கள் ஆசிரியர்கள் ஆவர்.

ஆசிரியர் அறிவுப் பொக்கிசம் நிறைந்தவராகவும் நன்னடத்தை மிக்கவராகவும் திகழ வேண்டும் எனவும் விரும்பினார்.

வல்லயுடைய நன்னடத்தையில்லாத ஆசிரியரிடம் கற்பதை விட வல்லமை குறைந்த நன்னடத்தையுள்ள ஆசிரியரிடம் கற்பது பயனுடையது எனும் உபதேசங்களை முன்வைத்தார்.

அவ்வகையில் இலங்கையில் ஆசிரியர்களை நன்னடத்தை மிக்கவராக மாற்றுவதற்கு பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.

அனைவருக்கும் கல்வி வழங்கும் போது தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தியவர் காந்தியடிகளே ஆவார்.

தாய்மொழியூடாக கல்வி வழங்கும் போது மாணவர்களுக்கு தேசிய உணர்வு ஏற்படும் என்றும் நாட்டு விடுதலையை விரைவாகப் பெறலாம் என்றும் எண்ணினார்.

இதற்கமைய 1960 களில் முதன் முறையாக இலங்கையில் தாய்மொழிக் கல்வி முக்கிய இடம் பெற்றது.

இலங்கையில் கல்விச் சிந்தனையாளர்கள் தாய்மொழியூடாக கல்வி வழங்கும் போது அனேகமானோருக்கு கல்வி வழங்கும் சந்தர்ப்பம் ஏற்படலாம் என எண்ணினார். ஆனால் இக்கருத்து இன்று நகர்ப்புறங்களில் வலுவிழந்துகொண்டு செல்வதைக் காணலாம்.

புதிய நூற்றாண்டில் வாழ்நாள் கல்வி என்ற வாசகம் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உபயோகிக்கப்படுவதற்கும் காந்தியடிகளே மூலக் காரணமாக இருந்தார்கள் எனலாம்.

இவர் கருவிலிருந்து இறக்கும் வரை கல்வி வழங்கப்பட வேண்டும் எனும் கருத்தை மக்கள் மத்தியில் நிலை நிறுத்தினார்.

இதனாலேயே எமது நாட்டிலும் வாழ்நாள் கல்வி என்கின்றோம் அதே போன்று நாட்டு உதவாத கல்விக்கு இடமில்லை என்ற கருத்தையும் முன் வைத்தார்.

இக்கருத்தை அடியொட்டியே எமது நாட்டிலும் அடிக்கடி கல்வி சீர்திருத்தங்கள் ஏற்படுகின்றது.

எனவே இன்றைய இலங்கையின் கல்விச் சிந்தனைத் துளிகளில் தாய்மொழிக் கல்வி, செயன்முறைக் கல்வி, அனைவருக்கும் கல்வி, வாழ்நாள் நீடித்த கல்வி, ஆசிரியர் ஒழுக்கம் போன்ற விடயங்கள் கல்வி செயற்பாடுகளில் இணைக்கப்பட்டு காந்தியடிகளின் கருத்துகள் கல்விச் சிந்தனையின் ஊற்றுக்கலாகக் காணப்படுகின்றன எனலாம்.
                                                               
 ஆக்கம்.
இராசநாயகம் நிலோஜனா
2ஆம் வருட சிறப்புக் கற்கை,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
 வந்தாறுமுலை.