வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு இல்லை – சஜித் பிரேமதாச


வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தவருவதாக வாக்குறுதியளித்த எந்த பிரச்சினைக்கும் அரசாங்கம் இதுவரை தீர்வை பெற்றுக்கொடுக்காமல் அந்த மக்களை ஏமாற்றி இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11)  நளின் பண்டார எம்.பினால் கொண்டுவரப்பட்ட தனி நபர் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நமது நாட்டின் 9 மாகாணங்களிலும் தற்போதைய அரசாங்கம் பொய்களைக் கூறிக்கொண்டு பொய்ப் பிரசாரப் பயணத்தில்  ஈடுபட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது அப்பகுதிகளின் பல்வேறு பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

இந்த அரசாங்கம் இரண்டு ஆண்டுகளாக விழித்திருந்து பொழுதைப் போக்கியதே தவிர நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகள் என்பது வடக்கு, கிழக்கு மற்றும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உரிமைகளைப் பறித்த 2 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் பொய்ப் பிரசாரப் பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தாஹிர் எம்.பி.  சுட்டிக்காட்டியபடி, மருதமடு, நிந்தவூர், கல்முனை, சாய்ந்தமருது, நாவின்தன்வெளி, சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் கல்வி சீர்குலைந்துள்ளது, பாடசாலைகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லை மேலும், கோடீஸ்வரன் எம்.பி. சுட்டிக்காட்டியபடி ஒலுவில் துறைமுகம், திருக்கோவில், கதிரவெளி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு கடல் அரிப்பு ஏற்படுகிறது, இதற்கெல்லாம் அரசாங்கத்திடம் எந்தத் தீர்வும் இல்லை.

டாக்டர் ஸ்ரீநாத் எம்.பி. சுட்டிக்காட்டுவது போல், மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை குறித்து நீண்டகாலமாக மாவட்டக் குழுக்கள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கத்திடமிருந்து பதிலில்லை என்றும், திருக்கோவில் வைத்தியசாலை, பணங்காடு வைத்தியசாலை, நாவிதன்தன்வெளி வைத்தியசாலை ஆகியவற்றில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனித வளப் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதற்கும் அரசாங்கத்திடம் தீர்வு இல்லை.

டாக்டர் ஸ்ரீநாத் எம்.பி. மேலும் சுட்டிக்காட்டியபடி, கித்துல்உறுகாமம் நீர்த்தேக்கத் திட்டத்தின் மூலம் 26,000 ஏக்கர் நிலத்தை செயற்கை நீர்ப்பாசனம் மூலம் விவசாய நிலமாக மாற்ற முடியும் என்றும், இத்திட்டத்திற்கு வெளிநாட்டு உதவிகளை வழங்கத் தயாராக இருந்தபோதிலும் இத்திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை

மேலும் ஜி. ஸ்ரீநேசன் எம்.பி. சுட்டிக்காட்டியபடி, வாழைச்சேனை காகித ஆலையில் 4,000 பேர் பணியாற்றிய நிலையில் தற்போது 250 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்றும், தேர்தல் காலத்தில் இவற்றை அபிவிருத்தி செய்வதாக அளித்த வாக்குறுதிகளை இன்று அரசாங்கம் மீறியுள்ளது.

கனிம மணல் அகழ்வு போன்றவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கடல் அரிப்புக்குள்ளாகும் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத கனிம மணல் அகழ்வு நடைபெறுவதாகவும், இது தவிர நிலங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த எந்த பிரச்சினைக்கும் அரசாங்கத்திடம் தீர்வு இல்லை வடக்கு, கிழக்கு மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற அரசாங்கம், செய்வதாகக் கூறியவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்

டாக்டர் பி. சத்தியலிங்கம் எம்.பி. சுட்டிக்காட்டியபடி, மல்வத்து ஓயா திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் கிடைக்கப் பெறும் பலன்கள் சரியான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நிலங்களை வழங்குதல், இழப்பீடு வழங்குதல் போன்றவற்றுடன் நிவாரணம் பெற வேண்டியவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் ஒரு முறைமையைச் செயல்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.