வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா வெள்ளிக்கிழமை (04) கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 14ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் விழா நிறைவடையவுள்ள நிலையில், இதனையொட்டி செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் பங்கேற்கும் விசேட பாதயாத்திரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பாதயாத்திரையில் அம்பாறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளையும் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அன்றைய தினம் அதிகாலை 5.00 மணிக்கு பயணத்தைத் தொடங்கும் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பகுதிகளைச் சேர்ந்த பாதயாத்திரைக் குழுக்கள், காலை 6.00 மணிக்குள்ளாக காரைதீவு சந்தியில் ஒன்றிணையவுள்ளன. அங்கு காரைதீவு பிள்ளையார் ஆலய அடியார்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு கல்முனை நோக்கிப் பயணிக்கவுள்ளனர்.
தொடர்ந்து கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து முறைப்படி தொடங்கும் இப்பாதயாத்திரை மணற்சேனை மற்றும் சேனைக்குடியிருப்பு வழியே பயணித்து சவளக்கடை சந்தியைச் சென்றடையும். அதேவேளை வீரமுனையிலிருந்து புறப்பட்டு வரும் மற்றுமொரு பாதயாத்திரைக் குழுவினரும் சவளக்கடை சந்தியில் இவர்களுடன் கைகோர்க்கவுள்ளனர்.
அனைத்து பாதயாத்திரைக் குழுக்களும் ஒன்றுதிரண்டு மல்வத்தை நோக்கிச் சென்றுஇ அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், நிறைவாக அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை வந்தடையவுள்ளன.
எனவே, இந்த ஆன்மீகப் பாதயாத்திரையில் பங்கெடுக்க விரும்பும் பக்தர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் உரிய இடங்களில் ஒன்றுகூடிப் பயணிக்குமாறு அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயச் செயலாளர் பொன்னம்பலம் கணேசமூர்த்தி அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
