மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் எம்.வினோராஜ் அவர்களின் முன்மொழிவின் அடிப்படையில் பிரதேச சபை நிதியின் மூலம் இலவச அமரர் ஊர்தி சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2018ம் ஆண்டு பிரதேச சபை உறுப்பினராக இருந்தவேளை அவரால் முன்வைக்கப்பட்ட முதல் முன்மொழிவானவு அக்காலப்பகுதியில் நிறைவேற்றப்பட முடியாத நிலையில் தற்போது அவர் தவிசாளர் ஆன பிற்பாடு பல பிரயத்தனத்தின் மத்தியில் இவ் இலவச அமரர் ஊர்தி சேவையை ஆரம்பித்துள்ளார்.
குறித்த சேவையானது பிரதேச சபை எல்லையைத் தாண்டி நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளதாக இதன்போது அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன, மத, மொழி பேதமின்றி இலங்கையர் என்ற ரீதியில் பிரதேச சபையின் எல்லைக்கப்பால் நலிவுற்ற மக்களின் பொருளாதார நிலை கருதி இச்சேவை இலவசமாக நாட்டின் எப்பகுதிக்கும் வழங்கத் தயாராக உள்ளதாகவும், இருபத்து நான்கு மணி நேரமும் இச்சேவையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததோடு 0652250075, 0773925673 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான இச்சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.