மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை உருவாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது- சாணக்கியன் இராசமாணிக்கம்

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில்  தபால் சேவையில்   காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு கோரி  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்விகளை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை உருவாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.  முதியோருக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்பவர்கள் கிடைக்கும் தொகையை காட்டிலும் அதிக தொகையை போக்குவரத்துக்காக செலவழிக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது. ஆகவே பிரதேசங்களின் தேவையை கருத்திற் கொண்டு புதிய தபால் நிலையங்களை உருவாக்குமாறும், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும்  வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

புதிய கட்டங்களை உருவாக்கும் வரை இடைப்பட்ட காலத்தில் குறித்த பகுதிகளுக்கு நடமாடும் தபால் சேவையை ஆரம்பிக்குமாறும் பிரதி அமைச்சரிடம் யோசனை முன்வைத்தேன்.

இந்த யோசனைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடி  உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வெகுஜன  ஊடகத்துறை பிரதி அமைச்சர்  கௌசல்யா ஆரியரத்ன உறுதியளித்தார்.

களுவாஞ்சிகுடியில் நீண்டகால தேவையான காணப்பட்ட  அஞ்சல் அலுவலக கட்டத்தை நிர்மாணித்து தந்ததற்கு அமைச்சருக்கும், பிரதி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.கிரான் பகுதியில் தபால் நிலைய கட்டம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு திணைக்களத்துக்கு காணி இல்லை  என்பது பிரச்சினையாயின் காணி ஒன்றை நாங்கள் பெற்றுத் தருகிறோம். அப்போது அங்கு  கட்டடத்தை நிர்மாணிப்பீர்களா ? என்று  பிரதி அமைச்சரிடம் கேள்வியெழுப்பினேன்.

சித்தாண்டி உப தபால் நிலையம் பற்றி பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இந்த தபால் நிலையத்தில் வாரத்தில் வியாழக்கிழமை மாத்திரம் 75 ஆயிரம் ரூபா வருமானம்  கிடைக்கப்பெறுகிறது. மாதம் 2 50000 இலட்சம் ரூபா வருவாய் கிடைக்கப்பெறுகிறது.  மாவடிவேம்பு, ஈரலுக்குளம், இலுக்கு போன்ற பிரதேச மக்கள் இந்த தபால் நிலையத்தையே பயன்படுத்துகிறார்கள் என்பதை எடுத்துரைத்தேன்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில்  அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பல தபால் நிலையங்களும், உப தபால் நிலையங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக ஆரையம்பதி தபால் நிலையத்தை அபிவருத்தி செய்வதற்கான தீர்மானம் ஒன்று அபிவிருத்தி குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதிய தபால் நிலையங்களை உருவாக்குதல், உப தபால் நிலையங்களை தபால் நிலையங்களாக தரமுயர்த்தல் என்று பல  விடயங்கள் காணப்படுகின்றன என்ற  அவசியத்தயும் முன்வைத்தேன்.

கிண்ணியடி என்ற பகுதியில் புதிதாக உப தபால் நிலையத்தை நிர்மாணித்தால் சுங்காகேணி,  முராவெடு, கொண்டையன்கேணி, முருங்கல்தீவு, பிரம்படித்தீவு போன்ற பிரதேசங்களின் மக்கள் பயனடைவார்கள். முதியோர் கொடுப்பனவை பெறுவதற்கு  கிடைக்கும் தொகையை காட்டிலும் அதிக தொகையை பொதுமக்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. ஆகவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதி அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன,  புதிய கட்டம் நிர்மாணிப்புக்காக காணி தொர்பில் யோசனை முன்வைக்கப்பட்டால் அது குறித்து பரிசீலனை செய்யலாம். பிரதேச அபிவிருத்தி குழு ஊடாக அவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் தற்போது  பரிசீலனை செய்கிறோம்.

அதேபோல் புதிய தபால் நிலையம் மற்றும் உப தபால் நிலையம் உருவாக்கம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட தயாராகவுள்ளேன்.இது குறித்து எழுத்துமூல கோரிக்கையை முன்வைக்குமாறு   கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

மீண்டும் மேலதிக கேள்விகளை முன்வைத்து, கலந்துரையாடலில் ஈடுபட்டு புதிய  தீர்மானங்களை செயற்படுத்தும் வரை இடைப்பட்ட காலத்தில் நடமாடும் சேவையை அமுல்படுத்த முடியுமா என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.  பாவற்கொடிசேனை, காஞ்சிரங்குடா போன்ற பிரதேசங்களுக்கு உன்னிச்சை பிரதேசத்தின் ஊடாகவே  தபால் சேவை இயங்குகிறது.

கோரகனிமடு,வாகனேரி ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை நடமாடும் தபால் சேவை இயங்குகிறது. ஆகவே புதிய தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை உருவாக்கும் திட்டங்களை வகுக்கும் வரை இடைப்பட்ட காலத்துக்கு நடமாடும் தபால் சேவையை ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தினேன்.

இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர்,  நடமாடும் சேவையை ஆரம்பிக்கும் போது ஆளணி குறித்து கவனம் செலுத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட பிரதேசங்களில் இந்த சேவைகளை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பில்  அவதானம் செலுத்துகிறோம் என்று குறிப்பிட்டார்.