மண்டூர் முருகன் ஆலய மகோற்சவம்- பக்தர்களின் வசதிக்காக தெருவிளக்குகள் துரிதமாக சீரமைப்பு!


கிழக்கிலங்கையின் "சின்னக்கதிர்காமம்" எனப் போற்றப்படும் மண்டூர் அருள்மிகு கந்தசுவாமி (முருகன்) ஆலயத்தின் வருடாந்த மகோற்சவக் கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் பிரதான வீதிகளிலுள்ள தெருவிளக்குகள் திருத்தப்பட்டு புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சீரமைப்புப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, கடந்த 07.08.2026 ஆம் திகதி அன்று மண்முனை தென்எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபையின் மின் இணைப்பாளர்களினாலும், 08.08.2026 ஆம் திகதி அன்று போரதீவுப் பற்று பிரதேச சபையின் மின் இணைப்பாளர்களினாலும் மண்டூர், தம்பலவத்தை மற்றும் பாலமுனை ஆகிய பிரதான வீதிகளிலுள்ள தெருவிளக்குகள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டன.

நீண்டகாலமாகப் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட தெருவிளக்குகள் திருத்தியமைக்கப்பட்டதுடன், வெளிச்சம் போதாமலிருந்த இடங்களில் புதிய விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

நேற்று 08.08.2026 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள இம்மாபெரும் மகோற்சவக் காலத்தில், இரவு வேளைகளில் ஆலயத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான வீதிப் போக்குவரத்து வெளிச்ச வசதிகள் இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.