பொதுப் போக்குவரத்து சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 23ஆக நிர்ணயிக்க கோரிக்கை


பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயது 23ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கென தனியான வயதெல்லையை வரையறுக்கக்கூடாது எனவும் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் லலித் தர்மசேகர முச்சக்கர சாரதிகள் வயதெல்லை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால அரசாங்கங்கள் முச்சக்கரவண்டி தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்களை முன்வைத்திருந்தது. அதன்படி, 18 வயதில் சாரதி அனுமதிப்பத்திரம், 21 வயதில் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் 23 வயதில் பொதுப் போக்குவரத்து சேவைக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டிருந்தால், பொதுப் போக்குவரத்து சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதை உறுதிப்படுத்தியிருக்க முடியும். 18 வயதிலேயே மாணவர்கள் இத்தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்க முடிந்திருக்கும்.

எனவே, முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு தனியான வயது வரம்பை விதிப்பதற்குப் பதிலாக, பொதுப் போக்குவரத்து சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது 23ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றார்.