ஆலோசனைகள் செயற்பாடாக மாற வேண்டும்! மாவட்டக் கிளையுடன் இணைந்து மக்களுக்கான வேலைத்திட்டங்களை விரைந்து முன்னெடுக்க வலியுறுத்தல்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுடனான முக்கிய கலந்துரையாடல் இன்று (09.08.2026) கிரான்குளம், ஸீ மூண் மண்டபத்தில் (Sea Moon Hall) நடைபெற்றது.
இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள், அவற்றைத் தீர்ப்பதில் எதிர்நோக்கப்படும் நடைமுறைச் சவால்கள், பிரதேச சபைகளின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால நிலைபேறான அபிவிருத்தியை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இரா. சாணக்கியன் மற்றும் கௌரவ ஞா. ஸ்ரீநேசன் ஆகியோருடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் மாநகர முதல்வர், பிரதி முதல்வர், தவிசாளர்கள், உப தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டக் கிளையினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.
மாவட்டக் கிளையின் ஆலோசனைகளை இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தாத உள்ளூராட்சி மன்றங்கள், மாவட்டக் கிளையுடன் ஒருங்கிணைந்து தேவையான வேலைத்திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதேவேளை, மக்களின் தேவைகளை நேரடியாக அடையாளம் கண்டு, அவற்றுக்கு முன்னுரிமை வழங்கி, துரிதமாக பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் பாராட்டப்பட்டன.
மக்களின் அன்றாடத் தேவைகளை மையமாகக் கொண்டு, வெளிப்படைத்தன்மை, வினைத்திறன் மற்றும் பொறுப்புக்கூறலுடன் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.


.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
