மகாவலி குடியேற்ற விவகாரத்துக்கு உடனடி தீர்வு அவசியம் – சாணக்கியன்!


மகாவலி அதிகார சபை ஊடாக நீர் விநியோகிக்கப்படாமல் தேசிய இன விகிதாசாரம் மாறும் வகையில் குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்படுகிறது. இதுவே எமது அடிப்படை பிரச்சினை. மகாவலி அதிகாரசபை காணிக்குள் சட்டவிரோதமாக  பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியேற்றங்களை அமைக்கிறார்கள். இதனால் அப்பகுதியின் பண்ணையாளர்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் இடையில் எதிர்காலத்தில் முரண்பாடுகள் தீவிரமடையும். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என  இலங்கைத்  தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் விவசாயத்துறை மற்றும் காணி அமைச்சரான லால் காந்தவிடம்   கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதியுடன் நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற  கலந்துரையாடலின் போது மகாவலி பிரச்சினை பற்றி பேசப்பட்டது. இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.அதேபோல் நடைமுறையில் காணப்படும் பல பிரச்சினைகள் தொடர்பிலும்  கவனம் செலுத்தப்பட்டது.

கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் தற்போது  பிற்போட்டுள்ளது  போல்  தெரிகிறது.  கிடப்பில் போடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை அரசாங்கம்  எதிர்காலத்தில் கொண்டுவர முயற்சித்தால் அது குறித்து பேசலாம்.கவனம் செலுத்தலாம்.

மகாவலி அதிகார சபை ஊடாக வடக்கு  மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இதுவரையில் காலம் நீர் விநியோகிக்கப்படவில்லை.  ஆனால்  அதிகார சபை ஊடாக அநுராதபுரம், பொலன்னறுவை  மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது.

மகாவலியில் உள்ள காணிகளை பிரித்துக் கொடுப்பதிலும், சட்டவிரோதமான குடியேற்றங்களை அமைப்பதிலும் பிரச்சினை காணப்படுகிறது. இந்த  விடயத்தை அடிப்படையாகக் கொண்டே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன.

குடியேற்றங்களுக்கு  மாவலி அதிகாரசபையின்  காணிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.மணலாறு என்ற பகுதி வெலிஓயா என்று பெயர்மாற்றப்பட்டு மகாவலி அதிகார சபை திட்டத்தின் ஊடாக குடியேற்றம் உருவாக்கப்பட்டது.இந்த  குடியேற்றத்துக்கு நீர் வழங்கவே  தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மகாவலி அதிகார சபை ஊடாக நீர் விநியோகிக்கப்படாமல் தேசிய இன விகிதாசாரம் மாறும் வகையில் குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்படுகிறது.இதுவே எமது அடிப்படை பிரச்சினை மயிலத்தமடு மாதவனை என்ற பகுதியே  இல்லை என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.ஆனால் இன்று (நேற்று)  காலை மயிலத்தமடு மாதவனை பகுதியில் பசுக்கள் கொல்லப்பட்டுள்ளன.அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

மகாவலி காணிக்கள் சட்டவிரோத குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கால்நடை வளர்ப்பாளர்களுக்கும், பாற்பண்ணையாளர்களுக்கும் அவ்விடத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மாதவனை பகுதியை மேய்ச்சல் தரை பகுதியாக அறிவிப்பதாகவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும்  அரசாங்கம் குறிப்பிட்டது.

ஆனால் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்பதை அமைச்சரின் பதில் ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

மகாவலி அதிகாரசபை காணிக்குள் சட்டவிரோதமாக  பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியேற்றங்களை அமைக்கிறார்கள்.இதனால் அப்பகுதியின் பண்ணையாளர்களுக்கும் ,குடியேற்றவாசிகளுக்கும்  இடையில்  எதிர்காலத்தில்  முரண்பாடுகள் தீவிரமடையும். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணி பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்க வேண்டும். இல்லாவிடின் முரண்பாடுகளும், பிரச்சினைகளுமே தொடரும் என்றார்.