ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்றம்


கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு  ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடிஅமாவாசை மகோற்சவப் பெருவிழா இன்று (03) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான மாமாங்கேஸ்வர் ஆலய உற்சவப் பெருவிழாவின் த்வஜாரோஹணம் (கொடியேற்றம்) உற்சவம் இன்று நடைபெற்றது.

மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்திலிருந்து எம்பெருமான் சர்வ அலங்காரங்களுடன் கொடிமரத்தில் (கொடிஸ்தம்பம்) எழுந்தருளினார்.

பின்னர் கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரிய பெருமக்கள் நடத்தி வைத்தனர்.

மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத தேவாரப் பாராயணங்கள் இடம்பெறஇ பக்தர்களின் "அரோகரா" கோஷத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடந்தேறியது.

மாமாங்கேஸ்வரரின் கொடியேற்றத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

அமிர்தகழி மாமாங்கேஸ்வரரின் தேர்த்திருவிழா 11ஆம் திகதியும் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.