மண்முனை தென்மேற்கு பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (28.08.2026) நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான க. பிரபு அவர்களின் தலைமையில், பிரதேச செயலாளரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இதன்போது, பிரதேசத்தின் தற்போதைய நிலை, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதுடன், இவ்விடயம் தொடர்பில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அதேபோன்று, கடுகாமுனை – கொக்கட்டிச்சோலை ஆற்றங்கரையோரங்களில் அமைந்துள்ள ஆற்றுக்கட்டைகளைப் புனரமைத்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொக்கட்டிச்சோலை – அம்பிளாந்துறை வீதி அபிவிருத்திப் பணிகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், வில்லுக்குளம் வீதி புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த வேண்டும் எனவும் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார். மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வரும் வீதி அபிவிருத்திப் பணிகள் உரிய முறையில் நிறைவு செய்யப்படுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், விடுதிக்கல், மாவடிமுன்மாரி மற்றும் முதலைக்குடா மேற்கு பாடசாலை வீதி பகுதிகளில் நிலவும் குடிநீர் தேவையை கருத்திற்கொண்டு, அப்பகுதிகளுக்கான குடிநீர் வசதியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் இடம்பெற வேண்டும் என்றும் சாணக்கியன் வலியுறுத்தினார். விவசாயிகள் தமது விளைச்சலை உரிய விலையில் சந்தைப்படுத்துவதற்கு ஏற்புடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அம்பிளாந்துறை பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் தேவைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மீனவர்களுக்கான சங்கக் கட்டிடம் ஒன்றை அமைப்பதுடன், பாதை இறங்குதுறையில் மலசலகூட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாணக்கியன் கோரிக்கை முன்வைத்தார்.
அதேவேளை, தாந்தாமலை முருகன் ஆலய கட்டட நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான அனுமதிகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கெவுளியாமடு பகுதியில் நிலவும் மேய்ச்சல் தரைக் காணி பிரச்சினை மற்றும் வனவளத் திணைக்களத்துடன் தொடர்புடைய காணிப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
மக்களின் அன்றாட வாழ்வாதாரம், விவசாயம், மீன்பிடி, குடிநீர்,போக்குவரத்து மற்றும் காணி உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுடன் தொடர்புடைய இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுடன் சாணக்கியன் கலந்துரையாடினார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் விளக்கங்களையும் கோரியதுடன், அவற்றை தாமதமின்றி தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க. பிரபு, ஞா. சிறிநேசன் ,வைத்தியர் இ. சிறிநாத், மண்முனை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பல்வேறு துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மண்முனை தென்மேற்கு பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்டநிறுவனங்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
.jpeg)
.jpeg)
.jpeg)
(1).jpeg)
(2).jpeg)
(1).jpeg)
(1).jpeg)
(1).jpeg)
.jpeg)