ஆரையம்பதியில் பாரிய விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் !


மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சாய்ந்தமருதிலிருந்து ஏறாவூர் நோக்கி திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வீதியோரத்திலிருந்த மின் கம்பத்துடன் பலமாக மோதியுள்ளது. இக்கடூர மோதலில் முச்சக்கர வண்டி முற்றாகச் சேதமடைந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 50 வயதுடைய தாய் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 55 வயதுடைய தந்தை மற்றும் 18 வயதுடைய மகள் ஆகியோர் படுகாயங்களுடன் உடனடியாக ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேலதிக அவசர சிகிச்சைகளுக்காக மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.