மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், கோட்டைகல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மாணவிகள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்றைய தினம் சனிக்கிழமை (22) இரவு 9.21 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கோட்டைகல்லாறு பகுதியில் நான்கு இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த போது, கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் வைத்து இரு மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன.
இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த ஒரு மோட்டார் சைக்கிள், மேலதிக வகுப்பை முடித்துவிட்டு வீதியைக் கடக்க முயன்ற மாணவர்கள் மீது மோதியுள்ளது.
விபத்து நடந்த இடத்திலேயே 18 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதோடு, படுகாயமடைந்து வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட 17 வயதுடைய மாணவனும் சிகிச்சை பலனின்றி இன்று (23) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.
விபத்தில் க.பொ.த சாதாரண தர வகுப்பில் படிக்கும் 3 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மாணவி ஒருவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
