மட்டக்களப்பு ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் மாகாண ரீதியில் அதிவிஷேட சித்தி


கல்வி அமைச்சின் கீழ் அகில இலங்கை பாடசாலைகள் கராத்தே சம்மேளனம் ஏற்பாடு செய்து நடாத்திய 13 வயதுப் பிரிவின் கீழ் கராத்தே சுற்றுப் போட்டி ஊவா, கிழக்கு மாகாண பாடசாலைகளை உள்ளடக்கியதாக 28.06.2026 ஆம் திகதி பதுளை, பண்டாரவளை உள்ளக விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

இப்போட்டி நிகழ்வில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை சார்பில் தரம் 6,7,8 வகுப்பைச் சேர்ந்த 14 மாணவர்கள் கிழக்கு மாகாண ரீதியில் Merit அதிவிஷேட சித்திபெற்று தேசியத்திற்கு தெரிவாகி இருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 5,6 ஆம் திகதிகளில் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற தேசிய போட்டியில் பங்குபற்றி சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாடசாலைக்கும், மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த இம்மாணவர்களுக்கான மாபெரும் கெளரவிப்பு நிகழ்வும், நினைவுச் சின்னம் வழங்குதலும் பாடசாலை காலை ஆராதணையில் அனைத்து மாணவர்களின் வரவேற்புடன் பாடசாலை முதல்வரின் தலைமையில் நடைபெற்றது.

இம்மாணவர்களையும் இவர்களை முறைமைப்படுத்தி பயிற்சிகளை வழங்கி விண்ணப்பங்களை மேற்கொண்ட எமது பாடசாலையின் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஜனாப் ஏ.ஆர்.நவாஸ் மெளலவி அவர்களையும் பாடசாலை ஆசிரியர்கள் சமூகம் உற்பட பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், மற்றும் பாடசாலை கழகங்கள் கெளரவித்தனர்.