திருகோணமலையில் தேசிய மாணவர் படையணியின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பயிற்சி முகாம் மிகக் கோலாகலமாக நேற்று (30) திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் நடைபெற்றது.நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டுள்ள இந்த முகாமினை, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பி. அருண ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
வெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
தேசிய மாணவர் படையணி ஏற்பாடு செய்துள்ள 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பயிற்சி முகாம் ஆகஸ்ட் 2 வரை திருகோணமலையில் நடைபெறுகிறது.
நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்துள்ள மாணவர் படையணியினருக்குப் பயிற்சியளிக்கும் வகையில், 352 அதிகாரிகளும் பயிற்றுவிப்பாளர்களும், 52 நிர்வாக மற்றும் பயிற்சி அலுவலர்களும் இதில் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில், தலைமைத்துவம், ஒழுக்கம், உடற்தகுதி, அணிவகுப்பு, சாகசப் பயிற்சிகள், பேரிடர் முகாமைத்துவம் மற்றும் குழு ஒருங்கிணைப்பு ஆகிய சிறப்புச் செயலமர்வுகள் இங்கு தீவிரமாக வழங்கப்பட்டு வருகின்றன."
இந்த சிறப்புமிக்க பயிற்சி முகாமினைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பி. அருண ஜயசேகர நேரடியாக பார்வையிட்டார். முகாமின் பயிற்சிகளை ஆய்வு செய்த அவர், மாணவர்களின் ஒழுக்கத்தையும் திறமையையும் வெகுவாகப் பாராட்டினார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், "மாணவர் படையணியினரின் ஒழுக்கம், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் நாட்டுப்பற்றை வலுப்படுத்துவதில் இவ்வாறான பயிற்சி முகாம்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
"இப்பயிற்சி முகாமின் பிரமாண்ட நிறைவு விழா, வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பயிற்சிகளைச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவு செய்யும் மாணவர் படையணியினருக்குச் சான்றிதழ்களும் கௌரவப் பாராட்டுகளும் வழங்கப்படவுள்ளதாக தேசிய மாணவர் படையணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
"நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவச் செல்வங்களை ஒழுக்கமும், தேசிய சேவை மனப்பான்மையும் கொண்ட சிறந்த தலைவர்களாக உருவாக்குவதில் இந்த வருடாந்த பயிற்சி முகாம் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது என்றார்.











