திருகோணமலைக்கு விஜயம் செய்தார் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சர்


திருகோணமலை துறைமுகம் மற்றும் சீனக்குடா விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையிலான உயர்மட்டக் குழு வியாழக்கிழமை (30) திருகோணமலைக்கு கள விஜயம் மேற்கொண்டது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் சீனக்குடா விமான நிலையத்தை நவீனமயமாக்கவும், திருகோணமலை துறைமுகத்தின் செயல்திறனை மேலும் உயர்த்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

விஜயத்தின் போது, விமான நிலையத்தின் அவசர அபிவிருத்தித் தேவைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன், துறைமுகத்திற்கு சொந்தமான பழமையான ஜெட்டிகளின் தற்போதைய நிலையும் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, துறைமுக வளாகத்தை ஒட்டிய காணி பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடலும் நடைபெற்றது.