மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டிய அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல வினா–விடை நேரத்தில் உரையாற்றிய அவர், குடிநீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கென தனியான திட்டமிடல் (வரைபு) பிரிவு அமைக்கப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்திய அவர், திருகோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்புக்கான திட்டமிடல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது பொருத்தமானதல்ல என்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கென தனித்திட்டமிடல் (வரைபு) பிரிவு நியமிக்கப்பட்டால், மாவட்டத்தின் நீர்விநியோகத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2017–2018 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சு அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முந்தனையாறு குடிநீர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எனினும், கடந்த 18 மாதங்களாக அந்த முகவர் நிறுவனம் திட்டப் பணிகளை மீண்டும் தொடர முன்வந்துள்ள நிலையிலும், இலங்கை அரசாங்கம் இதுவரை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, பிரெஞ்சு அபிவிருத்தி முகவர் நிறுவனத்துடனான ஒப்பந்தம் எப்போது கையெழுத்திடப்படும்? ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் முந்தனையாறு குடிநீர் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுமா? என அமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, முந்தனையாறு குடிநீர் திட்டம் கைவிடப்படவில்லை என்று உறுதியளித்தார்.
குறித்த முகவர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், இந்தத் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
