மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள் போன்ற இடங்களில் தீ விபத்துகள் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு முன்னெச்சரிக்கை கருவிகளை கட்டாயம் பொருத்த வேண்டும் என மட்டு மாநகர சபையில் இன்று (08) புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநகர சபையின் நகரப்பகுதியில் நேற்று (07) செவ்வாய்க்கிழமை இரண்டு கடைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்த விபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது மட்டுமன்றி, அண்மைக்காலமாக மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைத்தொகுதிகள் மற்றும் தங்குமிடங்கள் போன்றவற்றிலும் தொடர்ச்சியாக தீ விபத்துகள் பதிவாகி வருகின்றன.
இவ்வாறான அவசர காலங்களில் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தங்களை அர்ப்பணித்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பெரும் சேதங்கள் ஏற்படாமல் தடுத்து வருகின்றனர்.
இருந்தபோதும் அனைத்து வர்த்தக நிலையங்களில் கார்பன்-டை-ஆக்சைடு கொண்ட தீயணைப்பு கருவிகள் (சிலிண்டர்) கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். தீயணைப்பு கருவிகள் பொருத்தாத வர்த்தகர்களுக்கு, அடுத்த புதிய வருடங்களுக்கான வியாபார உரிமங்கள் எக்காரணம் கொண்டும் வழங்கப்பட மாட்டாது.
தற்போது உலகளாவிய ரீதியில் நிலவும் எல்லினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பமடைந்துள்ளதுடன், சூடான காற்று வீசி வறட்சியான சூழல் தீ மிக விரைவாகப் பரவுவதற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதால், வர்த்தகர்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதன் காரணமாக, மாநகர சபையானது திருகோணமலை, அம்பாறை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களில் 'தீ பாதுகாப்பு சான்றிதழ்களை' வழங்கி, இக்கருவிகளை பொருத்துவதற்கான அறிவுறுத்தல்களை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
எனவே, மாநகர சபை எல்லையிலுள்ள அனைத்து வர்த்தகர்களும் உடனடியாக மாநகர சபையுடன் தொடர்புகொண்டு, தத்தமது வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவிகள் பொருத்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாநகர சபை மிகவும் அழுத்தமாக கட்டளையிடுகின்றது என அவர் தெரிவித்தார்.
