குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு

வாழைச்சேனை, சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், செவ்வாய்க்கிழமை  (07)  பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுங்காங்கேணிப் பகுதியைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய தம்பிராசா மகேந்திரகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள சுங்காங்கேணித் தாமரைக்குளத்தில், திங்கட்கிழமை (06) அன்று மீன்பிடிப்பதற்காக வலையை வீசிவிட்டு இவர் வீடு திரும்பியிருந்தார். 

அதனைத் தொடர்ந்து,   மீன்பிடிப்பதற்காக செவ்வாய்க்கிழமை (07)  காலை  குளத்திற்குச் சென்றவர்,  வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றபோது, அவர் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபருக்கு வலிப்பு நோய் இருந்தமை தெரியவந்துள்ளது.

சடலத்தை நீதிவான் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேலும்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.