மட்டக்களப்பில் அதிகளவில் பதிவாகும் டெங்குநோயாளர்களின் எண்ணிக்கை

மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ந்து டெங்கு அச்சுறுத்தலாக சிவப்பு வலயமாக சுகாதார பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

 மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடந்த 09தினங்களில் 35க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தவேண்டுமானால் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் எனவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமாரின் தலைமையின் கீழ் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றது.

 இன்றைய தினம் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் ப.முருகதாசின் தலைமையில் புளியந்தீவு பொதுச்சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் வாவிக்கரையோரங்கள் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் நுளம்பு பெருகும் வகையில் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.

 இதன்போது மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமார் விஜயம் செய்து சிரமதான பணிகளை பார்வையிட்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி,நாடு தழுவிய ரீதியில் நாட்டில் 15 பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பகுதிகள் மிகவும் ஆபத்தான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

 எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும், மட்டக்களப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு டெங்கு நோயாளர்கள் கூடி காணப்படுகின்ற பகுதியாக அடையாளம் காணப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் மட்டும் எமது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தினால் பொலிஸாரின் உதவியுடன் 35-க்கும் மேற்பட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.