புதுப்பாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு நகருக்குள் வரும் பிரதான பாலங்களில் ஒன்றாகவும் அண்மையில் இடிந்துவீழ்ந்த பாலமாகவும் உள்ள புதுப்பாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

அண்மையில் இந்த பாலம் உடைந்து வீழ்ந்த நிலையில் தற்காலிகமாக பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பாலம் உடைந்துவீழ்ந்ததை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்திசாமி பிரபுஇஅமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து உடனடியாக பெய்லி பாலம் ஒன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்காலிக வீதியினை அமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்திருந்த நிலையில் இந்த பணிகள் இன்று நிறைவுபெற்று வீதியை பொதுமக்களின் பாவனைக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் நட.கதீசன்இநிறைவேற்று பணிப்பாளர் சு.கிருஸாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த பாலம் தற்காலிக பாலம் என்ற காரணத்தினால் குறித்த வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பாலம் தற்காலிகமாக திருத்தப்பட்டு போக்குவரத்திற்காக திறந்துவைக்கப்பட்டுள்ளதனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு நகருக்குள் உள்ள பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்துகள் இலகுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.