வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதயாத்திரைக்கான உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை இன்று (10) காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஆடிவேல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறும் இவ்விழா, எதிர்வரும் 30 ஆம் திகதி மாணிக்க கங்கையில் நடைபெறும் பாரம்பரிய நீர்வெட்டு (தீர்த்தோற்சவம்) நிகழ்வுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் , அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள ரத்நாயக்க, பியந்த விஜயரட்ண உள்ளிட்ட முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு உகந்தை மலை முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து உகந்தை முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சீதாராம் குருக்களவர்களினால் பாதை திறந்து வைக்கப்பட்டது.
உகந்தை மலையிலிருந்து கதிர்காமம் நோக்கிய காட்டு வழிப் பாதையில் இன்று காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காட்டுப்பாதை இன்று முதல் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை, தொடர்ந்து 15 நாட்களுக்கு திறந்திருக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்புப் படையினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் பாதயாத்திரிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வனவிலங்குகள் நடமாடும் பகுதிகள் வழியாகப் பயணிக்க வேண்டியிருப்பதால், பக்தர்கள் கூட்டமாகச் செல்ல வேண்டும் என்றும், வனப்பகுதியை மாசுபடுத்தாத வகையில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



