தொழிற்திணைக்களத்தின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் நாயகம் நதீகா வட்டலியத்தவினால் வியாழக்கிழமை (23) விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தொழிற்திணைக்களத்தின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் தரவுத்தளம் மற்றும் இணைய வழியிலான ஊழியர் சேமலாப நிதிய முறைமை சார்ந்த பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.
இத் தற்காலிக சேவை இடைநிறுத்தமானது தொழிற்திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாகாண, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களுக்கும் பொருந்தும்.
இதற்கமைய, குறித்த இரு நாட்களிலும் ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகள் மற்றும் புதிய பதிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட எந்தவொரு சேவையும் வழங்கப்படமாட்டாது.
அத்துடன், குறித்த இரு நாட்களிலும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஏற்கனவே நேரத்தை ஒதுக்கியுள்ள பொதுமக்கள், எதிர்வரும் ஒரு மாத காலத்தகுள் அமையும் வேறு ஏதேனும் ஒரு வேலைநாளில் சம்பந்தப்பட்ட தொழில் அலுவலகத்துக்கு வருகை தந்து உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
