அமெரிக்கா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதி


இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பொறுப்புத் தூதுவர் ஜெயின் ஹோவெல் (Chargé d'Affaires) Jayne Howell, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகரவை (மேஜர் ஜெனரல் (ஓய்வு)) சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – இலங்கை இடையேயான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இருநாடுகளின் கூட்டுப் பொறுப்பும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கூட்டுப் பயிற்சிகள் (Joint Training) ஊடாக இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளின் திறன்களை மேம்படுத்துதல், செயற்பாட்டு ஒருங்கிணைப்பு (Interoperability) திறனை வலுப்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை, இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்காளியாகத் தொடர்கிறது என அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பாதுகாப்பான, நிலையான, வளமான இந்தியப் பெருங்கடல் என்ற பொதுவான இலக்கை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா – இலங்கை கூட்டுறவு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அந்தச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.