அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, "வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு" அமைப்பினால் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள் ஊர்வலமாக சென்று படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் "பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக..." பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்"மதத்தின் பெயரால் பாலியல்குற்றவாளிகளை பாதுகாக்கவேண்டாம்,சட்டத்தினால் மறுக்கப்பட்ட பாலியல்வன்கொடுக்குமைக்கு பிணைகிடையானது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பெரிய பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிக்குவிற்கு எதிராக சட்டம் பாகுபாடின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.பெண்களுக்கு எதிரான, குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பை அரசு பலப்படுத்த வேண்டும்.
இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர்;,மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள் உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
இதன்போது மகஜர் வாசிக்கப்பட்டதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் மகஜர் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சார்ந்த பெண்களான நாம் அநுராதபுரத்தில் பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்காக நீதி கோரி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அனைத்துத் தரப்பினரிடமும் எமது பகிரங்க கோரிக்கையை முன்வைக்கிறோம்:
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் உறுப்புரை 12 ஆனது சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள், அனைவரும் சமமானமுறையில் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் எனக் கூறுகிறது.
இலங்கை குற்றவியல் கோவையின் 1995ம் ஆண்டைய திருத்தச்சட்டம் இல. 22 ஆனது, சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பாலியல் வல்லுறவை (கற்பழிப்பு) பாரதூரமான குற்றமாகக் கூறுகிறது. குற்றவியல் கோவையின் சரத்து 363 (உ) ஆனது, பதினாறு வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்ணை அவரின் சம்மதத்துடனோ, சம்மதமின்றியோ வல்லுறவுக்கு உட்படுத்தினால் குற்றவாளிக்கு தண்டனைக் கோவையின் சரத்து 364 இன் கீழ் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதோடு நட்டஈடு வழங்கவும் தீர்மானிக்கப்படும் என்று கூறுகிறது.
1979ஆம் ஆண்டைய இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டம் இல. 17 இன் முதலாவது அட்டவணையின் நிரல் ஐந்து ஆனது கற்பழிப்பு என்பது பிணை வழங்கப்படாத குற்றமாகக் கூறுகிறது. 1997 ஆம் ஆண்டைய பிணை சட்டம் இல. 30 இன் சரத்து 14 (1) (ஆ) ஆனது, குறிப்பிட்ட குற்றத்தின் பாரதூரத்தன்மை, குறிப்பிட்ட குற்றத்தின்பால் பொதுமக்கள் ஆற்றும் எதிர்வினையாது பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்குமானால் குறிப்பிட்ட சந்தேகநபருக்கு அல்லது குற்றவாளிக்கு நீதிமன்றம் பிணை வழங்காது எனக் கூறுகிறது.
அநுராதபும் சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையானது முழு இலங்கை மக்களையும் அதிர்ச்சிக்கும் துயரத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. மக்கள் பாதிக்கப்படும் போது, வணக்கத்தலங்களை நாடி வந்து அடைக்கலமடைவர். உதாரணத்துக்கு போர்க்காலங்களிலும், இன வன்முறைகளின் போதும் கோயில்களிலும், தேவாலயங்களிலும், பௌத்த விகாரைகளிலும், பள்ளிவாசல்களிலும் மக்கள் அடைக்கலம் அடைந்தனர். அந்தந்த வணக்கத்தலங்களை சார்ந்த மதத் தலைவர்கள் அவர்களுக்கு புகலிடம் அழித்து பாதுகாத்தனர்.
அண்மைய “டித்வா” புயலினால் மத்திய மலைநாட்டில் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ் மக்கள் பௌத்த பன்சலைகளில் அடைக்கலமடைந்திருந்தனர். அங்கிருந்த பௌத்த பிக்குமார் அடைக்கலமடைந்தவர்களை இன, மத பேதமற்று இரவு பகலாக பராமரித்து ஆறுதலளித்தனர். ஒருசிலர் தமது சுய நலன்களுக்காக மதத்தை கவசமாக்கிக்கொண்டு குற்றங்களை இழைப்பதும், மதத்தின் பெயரால் தமது குற்றத்தை மறைக்க முயல்வதையும் அனுமதிக்க முடியாது.
அவ்வாறே குறுகிய மதவாத சிந்தனையுடன் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்வதையும் அனுமதிக்க முடியாது. அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள். அந்த அடிப்படையில் யார் குற்றம் புரிந்தாலும் அவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும். பாலியல் குற்றவாளிகளை சமூக அந்தஸ்து, அரசியல் அதிகாரம், மத தலைமைத்துவம் ஆகிய காரணங்களுக்காக பாதுகாக்க வேண்டாம். சட்ட ஆட்சியை முதன்மைப்படுத்தி பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
